Published : 26 Jun 2023 12:36 PM
Last Updated : 26 Jun 2023 12:36 PM

சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து நின்று போனதால், கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தின் தெற்கு பகுதிகளான சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்படும், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பொன்னன்குறிச்சி ஆற்றுப் பகுதியில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ், எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சியர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல, எம்எல்ஏ பின்னால் அமர்ந்து பயணித்தார். அதிகாரிகளும் மோட்டார் சைக்கிள்களில் உடன் சென்றனர்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் தாமிரபரணி நதியில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வல்லநாடு, பொன்னன்குறிச்சி, குரங்கணி ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. சாத்தான்குளம் பகுதிக்கு 308 கிராம குடிநீர் திட்டம் மூலம் 9 இடங்களிலும், திருச்செந்தூர் பகுதிக்கு 109 கிராம குடிநீர் திட்டம் மூலம் 5 இடங்களிலும் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதியில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் சாத்தான் குளம் மற்றும் திருச்செந்தூர் பகுதிக்கு தண்ணீர் எடுக்கப்படும் கிணறுகளிலும் தண்ணீர் குறைவாக உள்ளது.

இந்த கிணறு அமைந்துள்ள நதி பகுதியில் வடக்கு ஓரத்தில் தண்ணீர் செல்கிறது. இதனை தென் பகுதிக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனவே, கிணறு அமைந்துள்ள பகுதிக்கு தண்ணீர் வந்துவிடும். இங்குள்ள மோட்டார்களும் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் தண்ணீர் செல்லும் குழாய்களிலும் கசிவு ஏதும் உள்ளதா என்றும் ஆய்வு செய்து சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஓரிரு நாட்களில் சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் சீராக வழங்கப்படும். கால்வாய் மற்றும் குளங்களை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆழ்வார்தோப்பு பகுதியில் அணைக்கட்டு கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தின் பணிகள் முடிந்து தமிழக முதல்வரால் விரைவில் திறக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் அரசூர், கொம்மடிக்கோட்டை வரை கால்வாய் வருகிறது. எனவே கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என்றார். தாமிரபரணி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x