

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, தஞ்சை, திருவாரூர் மாவட்ட மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட மக்கள் இயக்கங்கள் அனைத்தும் ஒரே கூட்டமைப்பாக உருவாகியுள்ளன. இவற்றின் சார்பில் மாவட்டந்தோறும் ஆதரவு திரட்டப்பட உள்ளதாக சுப. உதயகுமார் தெரிவித்தார்.
தமிழக மக்கள் இயக்கங்களின் ஒன்றுகூடல் மற்றும் கருத்தரங்கம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் குழு சுந்தர்ராஜன், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சமது, மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்குழு திருநாவுக்கரசு மற்றும் முல்லை பெரியாறு உரிமைக் குழு, கெயில், நியூட்ரினோ எதிர்ப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்ட நிறையில் சுப. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடும் பல்வேறு மக்கள் இயக்கங்கள், போராட்டக் குழுக்களின் மாநில அளவிலான கலந்துரையாடலில், அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராடுவது என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல், வளம் திருட்டு, ‘வளர்ச்சி’ திட்டங்கள் போன்றவற்றுக்கு எதிராகப் போராடும் குழுவினர் அனைவரும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, சாதி, மத, அரசியல் பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வருகிற செப். 10-ம் தேதி, அதாவது கூடங்குளம் போராட்டம் 3-ம் ஆண்டை நிறைவு செய்யும் நாளில் அனைத்து இயக்கங்களும் இடிந்தகரையில் மீண்டும் ஒன்றுகூட உள்ளது. அணுஉலை, மீத்தேன் போன்ற பிரச்சினைகள் அந்தந்த பகுதிக்கானது அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கான பிரச்சினை என்று எடுத்துரைக்க மாவட்டந்தோறும் செல்லவுள்ளோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலைகளை ஏற்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சென்னையில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றார்.