Published : 25 Jun 2023 04:31 AM
Last Updated : 25 Jun 2023 04:31 AM

ஆராய்ச்சி மாணவர்களுக்காக குரல் கொடுத்த ஆசிரியர்களை தண்டிப்பது ஜனநாயகம் இல்லை

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்காக தங்களது இளமைக்காலத்தை தியாகம் செய்யும் ஆராய்ச்சி மாணவர்கள், உதவித்தொகை குறைக்கப்பட்டதை எதிர்த்து போராடும்போது, அவர்களுக்காக குரல் கொடுத்த ஆசிரியர்களை தண்டிப்பது என்பது உண்மையான ஜனநாயகம் கிடையாது என தமிழ்நாடு பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகம், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை குறைத்ததை எதிர்த்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் நலனுக்கு விரோதமாக மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டியதாக 4 பேராசிரியர்களை இடை நீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ள கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்களின் அமைப்பான ‘தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பு, பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என பல்கலைக்கழகத்துக்கும், சார்க் உறுப்புநாடுகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரான பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: டெல்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் வரம்பு மீறி செயல்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை, பெல்லோஷிப் என்பதற்கான வரையறை மாறுபட்டாலும் கண்ணியத்துடன் படிப்பைத் தொடர அவர்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்படும் ஊதியம். இந்த தொகை தங்களின் வாழ்வாதாரத்துக்கு போதவில்லை என அந்த மாணவர்கள்உணரும்போது அதை உயர்த்தித்தர கோருவதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு.

ஏனெனில் ஆராய்ச்சி படிப்பின் மூலமாக நாட்டின் வளர்ச்சிக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தங்களது இளமைக்காலத்தை தியாகம் செய்யும் ஆராய்ச்சி மாணவர்கள், சம வயது இளைஞர்கள் சம்பாதித்து வாழ்க்கையை அனுபவிக்கும்போது மற்றவர்களைப் போல வாழ இவர்களுக்கு வழியில்லை.

அவர்களின் இந்த தனிப்பட்ட ஆர்வமே சமூக, பொருளாதார விடுதலைக்கும் முக்கிய பங்காற்றும். எதிர்கால சந்ததியினரும் இந்த ஆராய்ச்சிகளால் பயன் பெறுவர். அதன்காரணமாக பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் தடையின்றி தங்களது படிப்பைத் தொடர இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தங்களது உரிமைக்காக போராடினால் அதற்கு ஜனநாயக ரீதியாக தீர்வுகாண வேண்டிய பொறுப்பும், கடமையும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத்தான் உள்ளது. அதைவிடுத்து போராட்டத்தை தூண்டினார்கள் எனக் கூறி 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல. ஒரு போராட்டத்தை ஒடுக்குவதும், அதை தங்களுக்கு எதிரான சவாலாக நினைப்பதும் நிர்வாகத்தின் வெற்றியாகிவிடாது.

அதேபோல, மாணவர்களின் உண்மையான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க ஆசிரியர்களுக்கும் முழு உரிமை உண்டு. இதற்காக ஆசிரியர்களையும், மாணவர்களையும் தண்டிப்பது என்பது ஜனநாயகம் ஆகாது. எனவே பல்கலைக்கழக நிர்வாகமும், சார்க் உறுப்பு நாடுகளும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x