Published : 25 Jun 2023 05:46 AM
Last Updated : 25 Jun 2023 05:46 AM
சென்னை: சென்னையில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று சந்தித்து, அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஜ வளாகத்தில் ஆசிரியர் சங்கங்களை அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த 22-ம் தேதி, முதல் கட்டமாகச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் சங்கங்கள், அரசு தேர்வுகள் இயக்கக சங்கங்கள், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும சங்கங்கள், நூலகர்கள் சங்கங்கள், தனியார் பள்ளிகள் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை நேற்று சந்தித் தார்.
அப்போது அமைச்சரிடம், சம வேலைக்கு, சம ஊதியம் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்துதல், மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துதல், மாணவர்களுக்கான இலவச உபகரணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்க வழிவகை செய்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக, ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதிச்சுமை சார்ந்த கோரிக்கைகளுக்கு எப்படி தீர்வு காண வேண்டும்? என்ற வகையில் நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்தஉள்ளோம்.
அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீதும் சட்டத்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறையில் இப்போது வரை எந்த மாற்றமும் இல்லை. இந்த கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகள் அனைத்தும் மாநில கல்வி கொள்கைக் குழுவிடம் வழங்க இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT