Published : 25 Jun 2023 11:02 AM
Last Updated : 25 Jun 2023 11:02 AM
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் வழிபட பொதுமக்களுக்கு தடை விதித்து வைக்கப்பட்ட பதாகையை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலரை தீட்சிதர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் (சிற்றம்பல மேடை) பொதுமக்கள் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய 4 நாட்கள் வழிபட தடை விதித்துள்ளதாக கோயில் தீட்சிதர்கள் கனகசபை வாயில் அருகே பதாகை வைத்துள்ளனர். இதை பார்த்த பக்தர்கள், இது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பதாகையை அகற்ற கோயிலுக்குள் சென்றனர். அப்போது காவல்துறை சார்பில் சரியான பாதுகாப்பு இல்லாததால் கோயில் தீட்சிதர்கள் தில்லை அம்மன் கோயில் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் செயல் அலுவலர், தீட்சிதர்களின் கூச்சலை சமாளிக்க முடியாமல் பதாகையை அகற்றாமலேயே கோயிலில் இருந்து திரும்பிச் சென்றார். இது குறித்து செயல் அலுவலர் சரண்யா கூறுகையில், பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT