Published : 25 Jun 2023 12:36 AM
Last Updated : 25 Jun 2023 12:36 AM

நம்பி வாக்களித்த தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றிவருகிறது: மதுரையில் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

மதுரையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின மாநில தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசினார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரையில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு ஹோட்டலில் அக்கட்சியின் நகர மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில், தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் எம்பிக்கள் என்எஸ்வி.சித்தன், சுப.உடையப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் விடியல் சேகர், கேஎஸ்கே.ராஜேந்திரன், தண்டபாணி, ராம்பிரபு, ராஜகோபால், மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி உள்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஆகஸ்ட் 15ல் ஈரோட்டில் நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பல பிரச்சினைகள் இருகு்கிறது. தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு, மக்கள் மீது திமுக அரசு அளவுக்கு அதிகமான வரிகளை சுமத்தி வருகிறது. நம்பி வாக்களித்த மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. மக்கள் மீது தொடர்ந்து வரிச்சுமையை கொடுப்பது திமுக அரசின் பழக்கமாக, வழக்கமாக மாறி இருக்கிறது.

சமீபத்தில் சாலை வரி என வாகனங்களுக்கு வரி விதிப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. தொடர்ந்து மின்சார கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாத வகையில் உயர்த்தி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு அடித்தளமே டாஸ்மாக், போதைப்பொருள்கள்தான். அதற்கு முடிவுக்கட்ட முடியாத அரசாக திமுக அரசு செயலிழந்து இருக்கிறது. தமிழக ஆளுநர் சட்டத்திற்குட்பட்ட செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

மடியில் கனமிருப்பவர்களுக்குத்தான் வழியில் பயமிருக்கிறது. அதனால் ஆளுநர் எங்கெல்லாம் செல்வாரோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. கூட்டணியில் பாஜக, அதிமுக, தமாகா ஓன்று சேர்ந்து பயணிக்கிறது. எங்களோடு ஒத்த கருத்துடைய கட்சிகள், புதிய கட்சிகள் கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்கேற்றவாறு பாஜக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாஜக தடையில்லாமல் பாதுகாப்போடு வளர்ச்சிப்பாதையில் செல்ல கூட்டணி கட்சிகள் எடுத்துரைக்கும். பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பாட்னாவில் நடத்திய கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டம் முரண்பாடுகளின் முழுவடிவமாக இருக்கிறது. அளித்த வாக்குறுதிகளுக்கு எதிராக செயல்படும் திமுக மீது தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது மேலும் அதிகரிக்க பாஜக அதிமுக, தமாகா கூட்டணிக்கு வரும் எம்பி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x