கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்த சம்பவம்: குருகுல பொறுப்பாளருக்கு முன்ஜாமீன் மறுப்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்த சம்பவம்: குருகுல பொறுப்பாளருக்கு முன்ஜாமீன் மறுப்பு

Published on

மதுரை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி குருகுல மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த வழக்கில் குருகுல பொறுப்பாளருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமன் அறக்கட்டளை பட்டர் குருகுலம் உள்ளது. இந்த குருகுலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வேதம் படித்து வருகின்றனர். இங்கு வேதம் படித்து வந்த மன்னார்குடியைச் சேர்ந்த மாணவர்கள் விஷ்ணுபிரசாத், ஹரிபிரசாத், ஆந்திரா மாணவர் சாய்சூர்யா அபிராம் ஆகியோர் 14.5.2023-ல் அதிகாலையில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குருகுல நிர்வாகி பத்ரிநாராயணன், குருகுல பொறுப்பாளர் ஸ்ரீனிவாசராவ் என்ற ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இவர்கள் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அரசு சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், "குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் யாரேனும் தவறு செய்தால் அவர்களை தண்டிக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சம்பவத்தன்று இறந்துபோன மாணவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ளனர். எனவே அவர்களை தண்டிக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்லப்பட்டுள்ளது. அப்போதுதான் உயிரிழப்பு நடைபெற்றுள்ளது. எனவே, இருவருக்கும் முன்ஜாமின் வழங்கக் கூடாது" என்றார்.

குருகுலம் வழக்கறிஞர் வாதிடுகையில், "குருகுல மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் சந்தியாவந்தனம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று கொள்ளிடம் ஆற்றில் முன்னறிவிப்பு இல்லாமல் 1903 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது தெரியாமல் குளிக்கப்போன மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்துக்கும் மனுதாரர்களுக்கும் தொடர்பு இல்லை" என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த சம்பவம் குருகுல பொறுப்பாளர் ஸ்ரீனிவாசராவ் என்ற ஸ்ரீனிவாசனின் கவனக்குறைவால் நிகழ்ந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

குருகுல நிறுவனர் பத்ரிநாராயணனுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 4 வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், தலைமறைவாகக்கூடாது. விசாரணைக்கு அழைக்கப்படும்போது ஆஜராக வேண்டும். சாட்சியங்களை கலைக்கவோ, தடயங்களை அழிக்கவோ முயற்சிக்கக்கூடாது. இதை மீறினால் போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in