

60 மணி நேரமாக இடிபாடுகளுக்கு மத்தியில் இருளில் சிக்கித் தவித்த சிலர் மீட்புப் பணியினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். உயிர்பிழைத்தவர்கள் தங்களது அனுபவத்தை 'தி இந்து' ஆங்கில நாளிதழுடன் பகிர்ந்து கொண்டனர்.
தலைக்கு மேல் வெறும் ஒன்றரை அடி உயரத்தில் இருந்த விட்டத்தை வெறித்தபடி கிட்டத்தட்ட 60 மணி நேரம் படுத்தே கிடந்திருக்கிறார் 30 வயது நிரம்பிய செந்தில்.
உயிர்பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அரிது என்ற மனநிலைக்கு வந்துவிட்ட செந்திலுக்கு செவ்வாய்க்கிழமை அவர் இருந்த பகுதிக்குள் வெளிச்சம் புகுந்தபோதுதான் நம்பிக்கை துளிர்த்திருக்க வேண்டும்.
"என்னுடன் இரண்டு பெண்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவருடன் அடிக்கடி பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தேன். ஆனாலும் அவர் நேற்றிரவு மயங்கிவிட்டார்" என மீட்கப்பட்ட செந்தில் தெரிவித்தார்.
மதுரை பேரையூரைச் சேர்ந்த செந்தில் நகர்ப்புறத்திற்கு பணிபுரிய வருவது இதுவே முதல் முறையாம். "இனிமேல், நிச்சயம் நகர்ப்புறத்திற்கு திரும்பி வரப்போவதில்லை" என்றார்.
செந்தில், அனுசூரியா, ஜெயம் ஆகிய மூவரும் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே அந்த கோர சம்பவம் நடந்துள்ளது. செந்திலுக்கு லேசான காயங்களே, அனுசூரியாவுக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜெயம் (35) உயிரிழந்தார்.
"எங்களைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் இருள். இன்று காலை திடீரென சிறு துவாரம் வழியாக வெளிச்சம் வந்தது. உடனே நான் உரக்கக் கத்தினேன். அண்ணா நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று. என்னை கண்டுகொண்ட மீட்புக் குழுவினர் எனக்கு கொஞ்சம் தண்ணீர் அளித்தனர். பின்னர் பத்திரமாக வெளியே இழுத்துக் கொண்டுவந்தனர்" என தனது அனுபவத்தை விவரித்தார் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த அனுசூர்யா.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பலரும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர்களில் பலருக்கு நடந்ததை விவரிக்கும் அளவுக்கு வார்த்தைகள் வரவில்லை.
விருதுநகரைச் சேர்ந்த பாண்டியராஜன் (27), பிரபு (22), சம்பவம் நடந்த 4 மணி நேரத்திலேயே தாங்கள் மீட்கப்பட்டதை பெரும் அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். ஆனால் தங்கள் நண்பர் கருப்பைய்யா நிலை என்னவென்பது தெரியாமல் வருந்துகின்றனர்.
ஆந்திரம் மாநிலம் விஜியநகரத்தைச் சேர்ந்த லட்சுமி தான் மீட்கப்பட்டாலும் தனது கணவர், மகளின் நிலை தெரியாமல் தவிப்பில் உள்ளார்.
இன்னும் பலர் சோகமும், அச்சமும் அகலாமல் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.