Published : 24 Jun 2023 06:32 AM
Last Updated : 24 Jun 2023 06:32 AM

கருணாநிதி நூற்றாண்டு: தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று மெகா மருத்துவ முகாம்

கோப்புப் படம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, கடந்த 15-ம் தேதி சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 24) 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் 30 துறைகளை ஒருங்கிணைத்து பெரிய அளவில் 100 மருத்துவ முகாம்கள் ஜூன் 24-ம் தேதி நடத்தப்படுகின்றன. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. ஏற்கெனவே 5 மண்டலங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள மண்டலங்களில் மண்டலத்துக்கு ஓர் இடம் வீதம் 10 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 90 இடங்களிலும் ஒரே நாளில் 100 மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை முகாம்கள் நடைபெறும்.

காசநோய் கண்டறிவதற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய 28 வாகனங்களும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள அதிநவீனவசதிகளுடன் கூடிய மருத்துவ உபகரணங்களும் இந்த மருத்துவ முகாம்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு முகாமிலும் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இருப்பார்கள். முகாம்களில் ஈசிஜி, ரத்தம் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். மேல் சிகிச்சைதேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சைஅளிக்கப்படும்.

இந்த முகாம்களில் பங்கேற்பவர்களுக்கு முதலமைச்சரின் விரிவானமருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து அட்டைகள் வழங்கப்படும். ஒவ்வொரு முகாமிலும் சுமார் 1,000 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x