

சென்னை: அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப்பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கிலும், ஊழலை தடுக்கும் நோக்கிலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதிவு அலுவலகங்களுக்குள் பத்திர எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், பத்திர எழுத்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் பல்வேறு சுற்றறிக்கைகள் வாயிலாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், துணை பதிவுத் துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் திடீர் ஆய்வுகளின் போது பத்திர எழுத்தர்கள், இடைத்தரகர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் வருவது தவிர்க்கப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பத்திர எழுத்தர்கள் தொடர்பான கூடுதல் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர அலுவலகத்துக்குள் பத்திர எழுத்தர்கள் நுழையக் கூடாது என்பதை சார்பதிவாளர்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த அறிவுரையை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் பத்திர எழுத்தர்கள் மற்றும் இடைத் தரகர்களின் செயல்பாடு, நடமாட்டம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறும் பத்திர எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், இதைகண்காணிக்கத் தவறும் சார்பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பத்திர எழுத்தர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை சார்பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மண்டல துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் ஆய்வுகளி்ன்போது இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.