Published : 24 Jun 2023 05:33 AM
Last Updated : 24 Jun 2023 05:33 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து லாரிகள் மூலம் ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததால், தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. இந்நிலையில், ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையில் மீதமுள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்தது.
இதற்காக உதவி ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழுவை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அமைத்துள்ளார். தொடர்ந்து, ஆலை வளாகத்திலும், நுழைவுவாயிலிலும் 18 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கடந்த 21-ம் தேதி ஜிப்சத்தை அகற்ற வசதியாக கனரக வாகனங்கள் மற்றும் 6 பணியாளர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். உறைந்த நிலையில் இருந்த ஜிப்சம் கழிவுகளை பொக்லைன் மூலம் அவர்கள் உடைத்தனர். தொடர்ந்து, லாரிகள் மூலம் ஜிப்சத்தை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது.
முன்னதாக, உள்ளூர் மேலாண்மைக் குழுவினர் முன்னிலையில் 4 லாரிகள் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் ஜிப்சம் கழிவுகள் ஏற்றப்பட்டு, திருநெல்வேலி, விருதுநகரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆலையின் உள்ளே செல்லும் வாகனங்கள், ஆலையில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. ஆலையைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT