எதிர்க்கட்சிகள் கூட்டணியால் பாஜக மேலும் வலுவடையும் - ராம ஸ்ரீனிவாசன் கருத்து

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன்.
Updated on
1 min read

மதுரை: ‘‘எதிர்க்கட்சிகள் கூட்டணியால் பாஜக மேலும் வலுவடையும்’’ என பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார்.

மதுரையில் பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பை உருவாக்க வேண்டும் என பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன. பாஜக வெற்றியை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிதிஷ்குமார் அழைப்பை ஏற்று கூடி உள்ளனர். நிதிஷ்குமார் தேர்தலுக்கு தேர்தல் நிறத்தை மாற்றிக்கொள்பவர். பீகார் கூட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தவிர்த்து வேறு தலைவர்கள் பங்கேற்கவில்லை.

அந்தக் கூட்டத்தில் 400 தொகுதிகளில் பொதுவான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என பேசியுள்ளனர். இதிலிருந்து அந்த 400 தொகுதிகளில் பாஜக வலுவாக இருப்பதை அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் உள்ளது.

எப்படியிருந்தாலும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்பார். எதிர்க்கட்சிகள் கூட்டணியில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கட்சிகள் தான் சேர்ந்துள்ளன. இந்தக் கூட்டணியால் பாஜக மேலும் வலுவடையும். ஆளுனருக்கு எதிராக மதிமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் முதல்வர் கையெழுத்திட முடியாது. முதல்வர் கையெழுத்திட்டால் அவருக்கு சிக்கல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, ஊடக பிரிவு மாநில செயலாளர் நாகராஜன், மாநகர் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மாநகர் பார்வையாளர் ராம்குமார், மகளிரணி செயலாளர் மீனாம்பிகை ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in