

திருப்பூர்: திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பனியன் கடைகள் இன்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பல கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின.
திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பனியன் பஜார் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் இயங்கி வlருகின்றன. இதனிடையே, இன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். திருப்பூர் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காதர் பேட்டை பனியன் விற்பனை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. முதல் கட்டமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார். தற்போதுவரை நான்கு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மின்கசிவு காரணமாக ஒரு கடையில் ஏற்பட்ட தீ , மளமளவென அனைத்து கடைகளுக்கும் பரவியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரிய வருகிறது.