

மதுரை: ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கேட்டு அளிக்கப்படும் மனு மீது மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திட்டக்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திட்டக்கோட்டையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் ஜூலை 29-ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறும் கிராமங்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்படும். இந்தாண்டு அரசிதழில் எங்கள் கிராமத்தின் பெயர் இடம்பெறவில்லை. எனவே, அரசிதழில் எங்கள் கிராமத்தின் பெயரை சேர்த்து வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சார்பில், ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமை நீதிபதி, ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த அனுமதி கேட்டு அளிக்கப்படும் மனுவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். அதன்படி மனுதாரரின் மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.