சென்னை மாநகராட்சி Vs மின் வாரியம்: ரூ.100 கோடி மின் கட்டண நிலுவை விவகாரத்தில் நடந்தது என்ன?

சென்னை மாநகராட்சி Vs மின் வாரியம்: ரூ.100 கோடி மின் கட்டண நிலுவை விவகாரத்தில் நடந்தது என்ன?

Published on

சென்னை: சென்னை மாநகராட்சி பாக்கி வைத்துள்ள ரூ.100 கோடி மின் கட்டணத்தை, மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்களில் வசூலிக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 2.90 லட்சத்துக்கு மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளது. இவற்றை தவிர்த்து பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை மின் வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டும். இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், இதை மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்களில் வசூலிக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அதன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "மின்சார வாரியத்துக்கு சென்னையில் சொந்தமாக இடம் இல்லை. இதன் காரணமாக மின்சார வாரியம் துணை மின் நிலையம் மற்றும் டினாஸ்ஃபார்மர்களை சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அமைத்துக் கொண்டிருந்தது. இந்த நிலத்துக்கான தொகையை மின்சார வாரியம், சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு வழங்க வேண்டிய தொகையை மின்சார வாரியம் வழங்காமல் இருந்தது. இதன் காரணமாக மின்சார வாரியத்துக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டிய தொகை அதிகரித்துவிட்டது.

எனவே, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து பாக்கி உள்ள ரூ.100 கோடியை மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்களில் கட்ட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி தான் தற்போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது எந்த வித நிலுவையும் இன்றி மின் கட்டணம் செலுத்தப்பட்டுவருகிறது" என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in