Published : 23 Jun 2023 04:05 AM
Last Updated : 23 Jun 2023 04:05 AM

சாதி, மத, இன, பொருளாதார பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள மெட்ராஸ் பார் அசோசியேஷனுக்கு உத்தரவு

சென்னை: சாதி, மத, இன, பொருளாதார பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரம்பரியமாக இயங்கி வரும் வழக்கறிஞர்கள் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேஷனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் பார் அசோசியேஷனில் மூத்த வழக்கறிஞர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். கடந்த 2012-ம்ஆண்டு இந்த சங்க அலுவலகத்துக்குள் சென்று தண்ணீர் குடிக்கமுயன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரனின் மகன் வழக்கறிஞர் நீல்ரஷனை அங்கிருந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான பி.எச்.பாண்டியன் தடுத்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து மெட்ராஸ் பார் அசோசியேஷனின் நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல இந்த சங்கத்தில் பழங்குடியின மற்றும் பட்டியலினத்தவர்களை சேர்க்க மறுப்பதாகக் கூறி வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸூம், தன்னை இந்த சங்கத்தில் சேர்க்கவில்லை எனக் கூறி எஸ்.மகாவீர் சிவாஜியும் இடையீட்டு மனுதாரர்களாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித்துள்ள விரிவான உத்தரவில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர்கள் மத்தியில் சாதி, மத, இன, பொருளாதார ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்தினால் திறமையான வழக்கறிஞர்களை நீதித்துறை இழக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும். மனுதாரர் யானை ராஜேந்திரனின் மகன் நீல்ரஷன் விபத்தில் இறந்து விட்டார்.

அதேபோல அவரை தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்த மூத்த வழக்கறிஞர் பி.எச்.பாண்டியனும் இறந்து விட்டார். ஆனால் ஒரு மனிதனுக்கு நடந்த சமூக தீங்குகள் அவர்களின் மரணத்துடன் முடிந்து விடுவது இல்லை. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது இனி வரும் நாட்களிலும் தொடரக் கூடாது.

அனைவரும் சமம் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதைத்தான் சக வழக்கறிஞர்களும் பின்பற்ற வேண்டும். சாதீய ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ எந்த பாகுபாடும் பார்க்கக்கூடாது. எனவே பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை மெட்ராஸ் பார் அசோசியேஷன் வழங்க வேண்டும்.

அதேபோல இடையீட்டு மனுதாரர்களான வழக்கறிஞர்கள் ஏ.மோகன்தாஸ், எஸ்.மகாவீர் சிவாஜி ஆகியோரை ஒரு வாரத்தில் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சங்கம் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் செயல்பட்டு வருவதால் மற்ற சங்கங்கள் போல இதையும் வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x