Published : 23 Jun 2023 04:07 AM
Last Updated : 23 Jun 2023 04:07 AM
சென்னை: கொல்கத்தாவைச் சேர்ந்த 39 வயது இளைஞர் கடந்த 6 மாதங்களாக வலது கை செயல்படாத நிலையில் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு 2 வயதிலேயே முதுகெலும்பில் ஓர் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு நடப்பதிலும் தன்னைத் தாங்கிக் கொள்வதிலும் சிரமம் ஏற்படத் தொடங்கியது. இதற்காக, அவரது ஊரில் அவருக்கு 2 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் உடல்நிலை மேம்படவில்லை. எனவே அவர் கோவிலம்பாக்கம் காவேரி இன்ஸ்ட்டியூட் ஆஃப் பிரைன் அண்ட் ஸ்பைன் நரம்பியல் டாக்டர் கே.ஸ்ரீதரை அணுகினார்.
டாக்டர் ஸ்ரீதர் அந்த இளைஞர் குழந்தையாக இருந்தபோது அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் குழுவில் இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஸ்ரீதர் இளைஞரைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, இளைஞரின் கழுத்து மற்றும் மார்புக்கு இடையே உள்ள முதுகு எலும்பில் சிக்கலான உருக்குலைவு இருப்பதையும் அது தண்டுவடத்தில் அழுத்தம் கொடுப்பதையும் கண்டறிந்தார்.
மேலும் முதுகெலும்புக்குள் நீர்மங்கள் சேர்ந்துள்ளதையும் கண்டறிந்தார். பின்னர் நோயாளியின் குடும்பத்தினரிடம் விளக்கி ஒப்புதல் பெற்ற பிறகு, டாக்டர் ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினர் மிகவும் நுட்பமான சிக்கல் வாய்ந்த அறுவை சிகிச்சையை 12 மணி நேரம் இடைவிடாது மேற்கொண்டனர். ஒரே நாளில் 3 கட்டங்களாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து டாக்டர் ஸ்ரீதர் கூறும்போது, “முன் பக்கமாக, மேல் மார்பு பகுதியிலிருந்து முதுகெலும்பை அணுகுவது என்பது பொதுவாக நடைமுறையில் இல்லாத ஒன்று. இருப்பினும், பல ஆண்டு அனுபவத்தால், தன்னம்பிக்கையுடன் இந்த நுணுக்கமான அறுவை சிகிச்சையை நிறைவேற்ற முடிந்தது” என்றார்.
டாக்டர்கள் சதீஷ் கண்ணன், செல்வன் பிரபாகர், தாஸ் ஆகியோரும் டாக்டர் வி.பொன்னையா தலைமையிலான நியூரோ அனெஸ்தீசியா குழுவினரும் இந்த அறுவை சிகிச்சையில் துணை நின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி குணமடைந்து, வலது கை செயல்பாட்டில் மேம்பாடு பெற்றதுடன் குறைவான ஆதரவுடன் நன்றாக நடக்கவும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT