

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனை வரவேற்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலம் நடத்தப்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை நேற்று முதல் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 140 டாஸ்மாக் கடைகளில் 16 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன.
தூத்துக்குடி பொன்னகரம், வட்டக்கோயில் பகுதி, அண்ணாநகர் பிரதான சாலை, பிரையண்ட்நகர், திருச்செந்தூர் சாலை மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதி, டபிள்யூஜிசி சாலை, புதிய பஸ் நிலையம் அருகே, பாலவிநாயகர் கோயில் தெரு, தூத்துக்குடி கல்லூரிநகர், கயத்தாறு கடம்பூர் சாலை, தெற்கு சுப்பிரமணியபுரம், கோவில்பட்டி எட்டயபுரம் சாலை, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி பால்பாண்டி பேட்டை தெரு, கோவில்பட்டி புதுரோடு, உடன்குடி செட்டிகுளம் மார்க்கெட் சாலை ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து கடைகளிலும் இது தொடர்பாக எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான கடைகள் செயல்பட பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவை ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த நடவடிக்கையை வரவேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 1-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இ.சுரேஷ், பொருளாளர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திக், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.எஸ். முத்து, சிஐடியு நிர்வாகிகள் காசி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மறைமாவட்ட அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை செயலாளர் அருட்தந்தை ஜெயந்தன் கூறும்போது, ‘‘தூத்துக்குடி டபிள்யூஜிசி சாலையில் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
இந்த மதுக்கடைக்கு அருகே ரயில் நிலையம், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அமைந்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு மனுக்களை அனுப்பினோம். அதன் விளைவாக அந்த கடை தற்போது மூடப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தப்படி 500 மதுக்கடைகளை மூடியுள்ளது. இதனை வரவேற்கிறோம். இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதுபோல் படிப்படியாக மதுபான கடைகளை மூடி பூரண மது விலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.