

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீதான தீண்டாமை வன்கொடுமையை அகற்ற தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, "திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் மிக மோசமான வகையில் தீண்டாமை வன்கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, சலூன்களில் முடிவெட்ட மறுப்பது,
தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை கடைபிடிப்பு, துணி சலவை செய்ய மறுப்பு, கடைகளில் மளிகை பொருட்கள் வழங்க மறுப்பு, பள்ளியில் பட்டியலின மாணவர்களை தூர நிற்க வைப்பது, பட்டியலின மக்கள் பகுதியில் தூய்மைப் பணிகள் செய்ய மறுப்பு போன்ற வகைகளில் தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், இவ்வூரில் பட்டியலின மக்கள் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு செல்ல வேண்டுமென்றால், அடுத்தவர் பட்டா நிலத்தில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இங்கு உள்ள பெருமாள் அப்பன் கோயில் வழியாக செல்லவோ, அங்கு வழிபடவோ அனுமதி மறுக்கப்படுகிறது.
இதேபோல், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து தங்கராஜ் என்ற பட்டியலின இளைஞர் வழிபடுதல் உரிமைக்காக அதிகாரிகளிடம் மனு கொடுத்து நடந்த பேச்சுவார்த்தையை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் கடந்த கடந்த 17-ம் தேதி தங்கராஜையும், பிறரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீண்டாமை வன்கொடுமைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இப்பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மோத்தக்கல், செல்லங்குப்பம் ஆகிய கிராமங்களில் நிலவும் தீண்டாமை கொடுமைகளை முற்றிலும் அகற்ற சட்டரீதியான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். தீண்டாமை வன்கொடுமையை கடைபிடிப்பவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
மேலும், பட்டியலின மக்களின் கோயில் வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதோடு, மயானத்துக்கு பாதை உள்ளிட்ட தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.