Published : 23 Jun 2023 05:22 AM
Last Updated : 23 Jun 2023 05:22 AM

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22  தமிழக மீனவர்கள்.

புதுக்கோட்டை/ராமேசுவரம்: எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் 450 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவற்றில், தமிழரசனுக்கு சொந்தமான படகில் தமிழரசன், சி.பாஸ்கர்(40), ஓ.முத்துராஜா(25), டி.அரேன்(20), டி.ஜெகநாத்(35), எஸ்.குமார்(43), உதயகுமாருக்கு சொந்தமான படகில் உதயகுமார், அவரது மகன்கள் ரவீந்திரன்(40), உலகநாதன்(35), வைத்தியநாதன்(27), அருள்நாதன்(23), முத்து மகன் குமரேசன்(35) மற்றும் அகிலா என்பவருக்கு சொந்தமான படகில் அவரது கணவர் காளிமுத்து(45), எம்.அர்ஜுனன்(50), எஸ்.குமார்(42), என்.குருமூர்த்தி(27), எம்.அருண்(22) ஆகியோர் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளில் இருந்த 17 மீனவர்களையும் கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 405 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அந்தோணி பிரசாத்துக்கு சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த சந்தியா, தேவா, நடராஜன், நாகராஜன், ஜிப்ரா ஆகிய 5 மீனவர்களை கைது செய்தனர்.

யாழ் சிறையில் அடைப்பு: 22 மீனவர்களையும் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்று விசாரணைக்குப் பின்னர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே, கடந்த 20-ம் தேதி தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் 21-ம் தேதி விடுதலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி தடைக்காலத்தில் 2 மாதங்களாக தொழிலுக்குச் செல்லாமல், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் படகுகளை பழுது நீக்கி தொழிலுக்கு சென்ற அதே வாரத்தில் இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமதாஸ் வலியுறுத்தல்: இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மீனவர் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தீர்க்க இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு மீனவர் சிக்கலைத் தீர்க்க அந்தக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்தாலும் கூட, அவற்றை இலங்கை அரசு மதிக்காதது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.

மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, சாதகமான முடிவை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x