Published : 23 Jun 2023 12:44 AM
Last Updated : 23 Jun 2023 12:44 AM
சென்னை: சென்னை அருகே லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு ரயில் இஞ்சினின் பின்புறம் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எண்.12164 பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே செல்லும்போது ரயிலின் இஞ்சினில் இருந்து புகை வெளிவருவதை பார்த்த பயணிகள் பதறியடித்து வெளியேறினர். இதன் வீடியோ காட்சிகள் வெளியானது.
இதனிடையே, தீ விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட லோக்மான்ய திலக் ரயிலில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை; HOG (ஹெட் ஆன் ஜெனரேஷன்) கப்ளரில் ஏற்பட்ட பிரச்னையால் புகை மட்டுமே வெளியே வந்தது. நீர் உட்புகுதல் காரணமாக HOG கப்ளரில் இருந்து புகை வந்தது.
புகையை கவனித்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி, பிரச்னையை சரிசெய்தார். புகை அணைக்கப்பட்டுவிட்டதால் ரயில் மீண்டும் இயங்க தொடங்கியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT