முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவு - காவல்துறை மரியாதைக்கு முதல்வர் உத்தரவு

முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவு - காவல்துறை மரியாதைக்கு முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இராஜாஜி, காமராஜர் மற்றும் கருணாநிதி ஆகிய மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியவரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளருமான சபாநாயகம் ஐ.ஏ.எஸ் உடல்நலக்குறைவால் மரணடைந்தார். அவருக்கு வயது 101.

அவரின் மறைவையடுத்து அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இராஜாஜி, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய நூற்றாண்டு நாயகர் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆட்சிப் பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர் அவர். ஆட்சிப் பணிக்கு வருவதற்கு முன்பாக இராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நேர்மையும் துணிச்சலும் தலைமைப் பண்பும், செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற சபாநாயகம், முன்னாள் முதல்வர் கருணாநிதி நன்மதிப்பைப் பெற்றவர்.

நூற்றாண்டுகளையும் கடந்து வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய சபாநாயகம் அவர்களை கௌரவிக்கும் விதமாக அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "விடுதலைக்கு முன்பான ஐ.சி.எஸ் காலத்தில் இருந்து தற்போதுள்ள ஐ.ஏ.எஸ் முறை வரை 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர் சபாநாயகம். ஆட்சிப்பணிக்கு வருவதற்கு முன்பாக இராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நேர்மையும் துணிச்சலும் தலைமைப் பண்பும் செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

கடந்த ஆண்டு அவரது நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவரது சிறப்புகளை எடுத்துக்கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகப்பெரும் பேறு. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்துள்ள அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in