நோயாளி மரண வழக்குகளில் மருத்துவர் மீதான கைது நடவடிக்கைக்கு தடை: தமிழக டிஜிபி உத்தரவு

காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு | கோப்புப்படம்
காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சிகிச்சையின்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம்சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காவல் துறையினருக்கு, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிகிச்சையின்போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும், எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-ன் (Causing death by negligence) கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் அளிக்கும்போது நிலைய அதிகாரி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அத்தகைய சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி வழக்குப் பதிவு செய்யும் முன் கீழ்காணும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

> முழுமையான விசாரணை நடத்தி அனைத்து விதமான வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்.

> மூத்த அரசு மருத்துவரிடம் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடமிருந்து வல்லுநர் கருத்து (ExpertOpinion) பெற வேண்டும்.

> இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-ன் கீழ் குற்ற செயல் உறுதி செய்யப்பட்டால், மேல் நடவடிக்கைக்கு முன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும்.

> சிகிச்சையின்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம் சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

> வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

> வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை (Express Report) காவல்துறை டிஜிபிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அனுப்பப்பட வேண்டும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in