ஒருபக்கம் குப்பை மேடு... மறுபக்கம் கிரிக்கெட்... - கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு பராமரிப்பில் அலட்சியம்!

ஒருபக்கம் குப்பை மேடு... மறுபக்கம் கிரிக்கெட்... - கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு பராமரிப்பில் அலட்சியம்!
Updated on
3 min read

உயிரிழந்த மக்களை சிரமத்துக்கு ஆளாக்காத வகையில் தூய்மையாகவும், நேர்த்தியாகவும், இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் இடங்கள் மற்றும் சுடுகாடுகளை அமைக்க அரசு முனைப்புக் காட்டி வருகிறது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அந்தக் கடிதத்திற்கு முற்றிலும் மாறாக சென்னையில் ஒரு சுடுகாடு உள்ளதை நம்மால் காண முடிந்தது.

அந்தச் சுடுகாட்டின் பெயர் கிருஷ்ணாம்பேட்டை நவீன எரிவாயு தகன மேடை. இந்தச் சுடுகாட்டில் நாம் கண்ட காட்சி எல்லாம் உயிரிழந்தவர்களின் உறவினர்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில்தான் இருந்தன. சென்னையில் நகரின் முக்கியப் பகுதியில் இந்த கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு உள்ளது. இந்தச் சுடுகாட்டில் வாரத்தில் 5 முதல் 10 உடல்களை தகனம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இந்த சுடுகாடு இயங்கி வருகிறது.

சுடுகாட்டின் உள்ளே செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையம் முறையாக செயல்படவில்லை. இதன் காரணமாக குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குப்பைகளுக்கு நடுவில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. தங்களுக்கு குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டு, அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய வரும் பொதுமக்களின் கண்ணில் இந்தக் குப்பை மேடுகள்தான் தென்படுகிறது.

மறுபுறம் சிறுவர்கள் சுடுகாட்டின் உள்ளே கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மனநிலையுடன் இருப்பார்கள். அவ்வாறு பல்வேறு மன நிலை கொண்டவர்கள் வந்து செல்லும் இடத்தில் ஒரு சில சிறுவர்கள் கத்திக் கொண்டு கிரிக்கெட் விளையாடி கொண்டு இருப்பது எந்த வகையில் சரி என்பதை இந்த சுடுகாட்டை பராமரித்து வரும் சென்னை மாநகராட்சிதான் விளக்கம் வேண்டும்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் மேற்கொள்ள வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மேயர் பிரியா நடத்தினார். இக்கூட்டத்தில், மேயர் பேசுகையில், "சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான மயானபூமிகளில் உடல்களை எரித்தல் மற்றும் புதைத்தல் சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இலவச சேவையினை அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். மயான பூமிகளில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மயான பூமிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ளவும் தன்னார்வ அமைப்புகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். இந்த மயான பூமிகளில் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அதற்குண்டான அறிவிப்புப் பலகைகளை மயானபூமிகளின் வாயிலில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். இது குறித்து தகவல்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும்.

மயான பூமியில் நுழைவுப் பகுதியை அழகுபடுத்தி, உட்புறங்களில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வரும் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுவரொட்டிகள் ஓட்டுவதைத் தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இவற்றில் ஏதாவது ஒன்று, இந்த கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் பின்பற்றபட்டுள்ளதா என்பதை சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும், உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து இருக்க வேண்டும். ஆனால், உத்தரவு போடுவது மட்டுமே நமது கடமை, செயல்படுத்துவது ஊழியர்களின் என்ற எண்ணத்தில் மேயரும், உயர் அதிகாரிகளும் இருந்துள்னர் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு.

இனி வரும் காலங்களில் மேயர், மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர், வட்டார துணை ஆணையர்கள், துறை தலைவர்கள் இதுபோன்ற இடங்களில் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மாநகர நல அலுவலர் ஜெகதீசனிடம் கேட்டபோது, “இந்த சுடுகாட்டை தூய்மையான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன்னதாக, தலைமை செயலாளர் எழுதி இருந்த கடிதத்தில், "உயிரிழந்த மக்களை சிரமத்திற்கு ஆளாக்காத வகையில், தூய்மையாகவும், நேர்த்தியாகவும், இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் இடங்கள் மற்றும் சுடுகாடுகளை அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது உள்ளது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் ஏற்கனவே சுடுகாடுகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. பல இடங்களில் உள்ள மயானம் மற்றும் சுடுகாடுகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நடைபெறும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. எனவே சுற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை நடுவதன் மூலம், பசுமை சுடுகாட்டை உருவாக்கலாம். மக்கள் அமருவதற்கு இருக்கை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்க உங்கள் பகுதியில் உள்ள சேவை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் சேவையையும் பயன்படுத்தலாம். இது நிச்சயமாக சுடுகாடுகளின் ஒட்டுமொத்த சூழலை மேம்படுத்தும். .

ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற ஒரு சிறந்த சுகாட்டை நீங்கள் உருவாக்கலாம் மற்றும் அதைப் பிரதிபலிக்கும் வகையில் மற்றவர்களை ஊக்குவிக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டின் பிம்பத்தையும் மேம்படுத்த இது பெரிதும் உதவும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தயவு செய்து செய்யுங்கள்” என்று அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in