

சென்னை: தமிழககத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதுக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மதிமுக: தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஏப்ரல் 12ம் தேதி, தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் இன்று, ஜூன் 22ம் தேதி முதல் மூடப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், ‘முழு மதுவிலக்கே நமது இலக்கு’ என்ற நோக்குடன் தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக சார்பில் வைகோ தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம்: மதுப்பழக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. தமிழகத்தின் சமூகப் பொருளாதாரத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அளவீடற்றவை. மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மதுக்கடைகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதைப் பாராட்டுகிறோம்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவனைகள், கோயில்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள் குறித்தும் ஆய்வு செய்து, அவற்றையும் அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவ போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் தமிழகத்தின் அனைத்து தாலுகாவிலும் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும். மதுபோதைக்கு அடிமையாகாத எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் இந்நிலைபாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது. அத்துடன், இனிமேல் புதிய மதுக்கடைகள் ஏதும் திறக்கப்படாது என்பதையும் அறிவிக்க வேண்டுமென்றும்; தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிற கடைகள் யாவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் படிப்படியாக முழுமையாக மூடப்படும் என அறிவிக்க வேண்டுமென்றும் எமது உயர்நிலைக்குழு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
1954 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் இந்திய அரசின் திட்டக்குழு சார்பில் 'மதுவிலக்கு விசாரணைக் குழு' என்னும் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு “மதுவிலக்கை அறிவிக்க மாநில அரசுகள், தெளிவான ஒரு கால வரையறையை அறிவிக்க வேண்டும். அதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளில் மது அருந்துவதில்லை என்பது கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்; பாதுகாப்புப் படை, காவல்துறை ஆகியவற்றில் மதுவிலக்கு முழுமையாக ஏற்கப்பட வேண்டும்” என்பவை உள்ளிட்ட பல பரிந்துரைகளை அரசிடம் அளித்தது. அவற்றை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.