Published : 22 Jun 2023 04:03 AM
Last Updated : 22 Jun 2023 04:03 AM

90 ஆண்டுகள் பழமையான நால்வர் மடாலயம் இடிப்பு: பொள்ளாச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பழமை வாய்ந்த நால்வர் மடாலயம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பல்லடம் சாலையில் டி.கோட்டாம்பட்டி பகுதியில் சுமார் 90 ஆண்டுகள் பழமையான நால்வர் மடாலயம் மற்றும் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பழனிகுமார் என்பவர் அறங்காவலராக இருந்து அறக்கட்டளை நிர்வாகிகள் மூலம் மடாலயத்தை நிர்வகித்து வருகிறார். மடாலயத்தை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருமணம், காதணி விழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

இங்கு சைவ சித்தாந்த வகுப்புகள், பெரிய புராண கதைகள் மற்றும் இலவசமாக யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தன. மகாலிங்கபுரத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர், இது தனது தாத்தாவின் சொத்து எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் பொக்லைன் வாகனத்துடன் வந்த கரூரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் நால்வர் மடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மடலாயத்தின் ஒரு பகுதியை இடித்து தரைமட்டமாக்கினர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அறங்காவலர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற மகாலிங்கபுரம் போலீஸார் 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நால்வர் மடாலயம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஏஎஸ்பி பிருந்தா, வால்பாறை டிஎஸ்பி கீர்த்தி வாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘சாதி, மத பேதம் இன்றி அனைத்து சமுதாய மக்களும் காலம் காலமாக இந்த நால்வர் மடத்தை சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், வெளியூர் ஆட்களை கொண்டு நால்வர் மடத்தை இடித்து தரைமட்டமாக்கியுள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x