டாஸ்மாக் மது வகைகள் பெரும்பாலும் கள்ளச் சாராயம்தான்: சி.வி.சண்முகம் எம்.பி

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  சி.வி.சண்முகம் எம்பி பேசுகிறார்.
விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்பி பேசுகிறார்.
Updated on
1 min read

விழுப்புரம்: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான சி.வி.சண்முகம் எம்பி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். இதில் பேசிய சி.வி.சண்முகம், “அமலாக்கத் துறையின் விசாரணையில் சிக்கியிருக்கும் செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும்.

கடந்த 2 ஆண்டு களில் இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், கலால் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அனுமதியற்ற பார் மூலம் மது விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரித் தால், நாம் சிக்கி விடுவோம் என்று கருதி ஸ்டாலின் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

ஸ்டாலின் யாருக்காகவும், எதற்காகவும் கவலைப்பட மாட்டார். அதே நேரத்தல் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார். இல்லாத இதய நோய்க்காக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாஷா நிலைதான் செந்தில் பாலாஜிக்கு ஏற்படும். இதை அவரின் குடும்பத்தினருக்கு நினைவூட்டுகிறோம்.

விலைவாசி உயர்வு, வரி விதிப்பு போன்றவைகளைப் பற்றி ஊடகங்கள் வெளியில் சொல்ல முடியவில்லை. அவை மிரட்டப்படுகின்றன. கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு இந்த அரசு வாடகை நிர்ணயம் செய்து, லட்சக்கணக்கில் வாடகை செலுத்த வலியுறுத்துகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு சாலை வரியை உயர்த்த உள்ளனர்.

இதனால் விலைவாசி உயரும். எந்தத் திட்டத்தையும் செயல் படுத்த பணம் இல்லை. ‘பணம் இல்லை’ என்று சொல்லும் இந்த அரசு, கருணாநிதிக்கு நூலகம், பேனா என பணத்தை வாரி இறைக்கிறது. மாணவர்களுக்கான இலவச மடிக்கணனி திட்டத்தை இந்த அரசு ரத்து செய்துள்ளது. டாஸ்மாக்கில் விற்கப்படும் பெரும்பாலான மது பானங்கள் கள்ளச் சாராயம்தான்.

அவற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. தஞ்சாவூர், மதுரை, மயிலாடுதுறை, லால்குடி மற்றும் சேலத்தில் மது குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை தொடர்கிறது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in