

விருதுநகர்: மொழியாலும், இனத்தாலும் நாட்டை பிளவுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, விருதுநகர் வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விருதுநகரில் உள்ள தியாகி சங்கர லிங்கனார் மணி மண்டபத்துக்குச் சென்று அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆளுநர் என்ற பொறுப்பையே நீக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இயங்க விடாமல் தடுப்பது மிகப்பெரிய கொடுமை. மொழியாலும் இனத்தாலும் நாட்டை பிளவுபடுத்துவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-தான்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழியாக வந்த தமிழக ஆளுநர் மொழியாலும், இனத்தாலும் நாட்டை பிளவுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார். ஆனால், அவரது கட்சி அவ்வாறு இல்லை. நேர்மையான அதிகாரி என்பதால் ஊழலைப் பற்றியும், லஞ்சத்தை பற்றியும் பேச அண்ணாமலைக்கு தகுதி இருப்பதாகவே கருதுகிறேன்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தினாலே போதும். மதுரைக்கு எய்ம்ஸ் வருவதால் எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து நாம் தமிழர் கட்சி பல முறை வலியுறுத்தியும் அரசு அதைப்பற்றி கேட்க தயாராக இல்லை. வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என நடிகர் விஜய் பேசிய கருத்தை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.