

சேலம்: போலி பத்திரங்களை ஒழிக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க 14 ஆயிரம் பேர் மனு கொடுத்தனர். அதில், 2,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
சேலம் மண்டல அளவிலான பதிவுத்துறை சீராய்வுக் கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சேலம் மண்டல துணைப் பதிவுத்துறைத் தலைவர் பிரபாகர் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி கூறியது: தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் உரிம விதிகளின் கீழ், அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர, பதிவு அலுவலகத்துக்குள், ஆவணம் எழுதுவோர் நுழையக்கூடாது என உள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமரும் இடத்தை ஆவணம் எழுதுபவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுவோர், இடைத்தர கர்களின் செயல்பாடு, நடமாட்டம் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை மீறும் ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இதைக் கண்காணிக்க தவறும் சார் பதிவாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. போலி பத்திரங்களை ஒழிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் 14 ஆயிரம் பேர் மனு கொடுத்தனர். அதில், 2,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் பத்திரப் பதிவு வருவாய் ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் பத்திரப் பதிவு அதிகரித்து, இந்த ஆண்டு ரூ.17 ஆயிரத்து 354 கோடியாக உயர்ந்துள்ளது, என்றார்.