வேங்கைவயல் விவகாரம்: ஒருநபர் விசாரணை ஆணையம் மீண்டும் ஆலோசனை

வேங்கைவயல் விவகாரம்: ஒருநபர் விசாரணை ஆணையம் மீண்டும் ஆலோசனை
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் ஒருநபர் விசாரணை ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, 2-வது முறையாக நேற்று அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இவர், கடந்த மே 6-ம் தேதி வேங்கை வயலுக்கு சென்று கள ஆய்வு செய்ததுடன், ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், 2-வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், ஆட்சியர் மெர்சி ரம்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் கூறியது: சிபிசிஐடி போலீஸார் இதுவரை 159 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், 50 பேரிடம் விசாரிக்க உள்ளனர். ஆடியோ சோதனை மற்றும் மனிதக் கழிவைக் கொண்டு நடத்தப்படும் மரபணு சோதனை முடிவுகளை வழக்கமான வரிசைப்படிதான் மேற்கொள்ள முடியும்.

எதையும் அவசரப்படுத்த முடியாது. சிபிசிஐடி விசாரணை நடந்து கொண்டிருப்பதால், சிபிஐ விசாரணை தேவையா என இப்போது முடிவு செய்ய முடியாது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. ஆனால், எப்போது கலக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

கடைசியாக டிச.22-ம் தேதி தொட்டியை சுத்தப்படுத்தியதாக கூறுகிறார்கள். எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை தொடர்ந்து பராமரிக்கும் முறை குறித்த அரசு நடைமுறைகள், விதிகளை அறிக்கையாகக் கேட்டுள்ளேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in