

எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பு ஆளுநர் தட்டிக் கழித்துவிட்டார். அதனால் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிட்டது என்பதாலேயே அவர் மாற்றப்பட்டிருக்கிறார் என்று அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை அடையாறில் உள்ள வீட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், நடராஜனை பார்ப்பதற்காக தன்னை 15 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி கர்நாடக சிறைத் துறையிடம் சசிகலா விண்ணப்பித்திருப்பதாக வழக்கறிஞர் கூறினார். அவருக்கு எத்தனை நாட்கள் பரோல் கிடைக்கும் என்பதை கர்நாடக சிறைத் துறைதான் முடிவு செய்யும்.
முதல்வர் கே.பழனிசாமிக்கு 21 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை. இந்த 21 எம்எல்ஏக்கள் தவிர மேலும் பலர் எங்களுடன் இருக்கிறார்கள். எனவே, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது இந்த ஆட்சி நிச்சயம் கவிழும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்.
எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியபோது அப்போதைய திமுக ஆட்சி எத்தகைய அராஜகங்களைச் செய்தது என்பதை அனைவரும் அறிவர். அதுபோலத்தான் முதல்வர் பழனிசாமி அரசு, எங்கள் ஆதரவாளர்களை கைது செய்து வருகிறது. அவர்களைத் தூண்டிவிட்டதாக என்னையும் வழக்கில் சேர்த்துள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதையும் மீறி அவர்களை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் விரை வில் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
பேரவையைக் கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பு ஆளுநர் தட்டிக் கழித்துவிட்டார். அதனால் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிட்டது என்பதாலேயே அவர் மாற்றப்பட்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.
பேரவையில் முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் சசிகலா அளித்த பதவி வேண்டாம் என்று முதல்வரும், அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக தலைமைக் கழகத்தில் மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி முதல்வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்.
டெங்குவைவிட இவர்கள் கொடியவர்கள். மக்களுக்கு ஆபத்தானவர்கள். டெங்கு எப்படி கட்டுப்படுத்தப்பட வேண்டுமோ அதுபோல இவர்களது ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்றார்.