ஐந்தாண்டு பி.எல். கவுன்சலிங் தொடங்கியது: முதலிடம் பெற்ற மாணவி சென்னை சட்டக் கல்லூரியை தேர்வுசெய்தார்
ஐந்தாண்டு பி.எல். படிப்புக் கான கவுன்சலிங் சட்டப் பல்கலைக்கழகத்தில் திங்கள் கிழமை தொடங்கியது. தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மாணவி மிட்டல் பி.ஜெயின் சென்னை அரசு சட்டக் கல்லூரியை தேர்வுசெய்தார்.
1,052 இடங்கள்
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.,பி.எல். படிப்பு வழங்கப் படுகிறது. இக்கல்லூரிகளில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்கு 6,359 மாணவர்கள் விண்ணப்பித் திருந்தனர்.
இதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கவுன்சலிங் ஜூலை 7-ம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித் திருந்தது.
அதன்படி, ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். படிப்புக்கான கவுன் சலிங் சென்னையில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் திங்கள் கிழமை தொடங்கியது.
சென்னை அரசு சட்டக் கல்லூரி தர வரிசைப் பட்டியலில் 99.375 மதிப்பெண் பெற்று முதலிடத் தைப் பிடித்த மிட்டல் பி.ஜெயின் சென்னை அரசு சட்டக் கல்லூரியையும், 2-ம் இடம் பெற்ற அஜீத்குமார் (99.250) கோவை அரசு சட்டக் கல்லூரியையும், 3-ம் இடத்தைப் பிடித்த மாணவி எம்.சித்ரா சென்னை அரசு சட்டக் கல்லூரியையும் தேர்வுசெய்தனர். அவர்களுக்கு பல்கலைக்கழக இணைவேந்தரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.வணங்காமுடி, சட்ட மாணவர் சேர்க்கை தலைவர் டி.கோபால், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.கே.தேவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முதல்நாள் கவுன்சலிங்கில் பொதுப் பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து எம்.பி.சி., பி.சி. மாணவர்களுக்கும் கவுன்சலிங் நடைபெற உள்ளது.
