Published : 25 Oct 2017 06:48 PM
Last Updated : 25 Oct 2017 06:48 PM

கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்: ராமதாஸ்

உயர் நீதிமன்றத்தின் கட்-அவுட், பேனர் தடையை ஆட்சியாளர்கள் உறுதியாக செயல்படுத்தி கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. பொருளாதாரம் மற்றும் நேர இழப்பு மட்டுமின்றி பண்பாட்டு சீரழிவுக்கும் வழிவகுக்கும் இக்கலாச்சாரத்திற்கு முடிவு கட்டக்கூடிய இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

பொதுமக்களிடம் நற்பணி மூலம் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியாதவர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு தங்களின் கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்களை அமைக்கச் செய்து, அதன் மூலம் தங்களின் செல்வாக்கு வளர்ந்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழகத்தில் மாவட்டம் தோறும் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் இந்த கூத்துகள் தான் நடக்கின்றன என்பதை ஆங்காங்கே அமைக்கப்படும் கட்-அவுட்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். இது ஒருவகை என்றால், அதிகாரத்தில் இருப்பவர்களின் கட்-அவுட்களை அமைத்து, அவர்களை குளிர்வித்து காரியங்களை சாதிப்பது இரண்டாவது வகையாகும். தமிழகத்தில் ஊழல் பெருகவும், அடிமைக் கலாச்சாரம் அதிகரிக்கவும் கட்-அவுட், பேனர்களும் காரணமாக இருப்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.

கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. 1995-ஆம் ஆண்டு வளர்ப்பு மகன் திருமணத்திற்காக சென்னை அடையாறு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வீடுகளின் கதவுகளை மறித்து கட்-அவுட், பேனர்கள் வைக்கப்பட்டதிலிருந்து அந்த வரலாறு தொடங்குகிறது.

இப்போது கூட தமிழகத்தில் ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்காக சாலைகளின் நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்-அவுட்டுகள், பேனர்களை அமைப்பது, சாலைகளை மறித்து வரவேற்பு வளையங்களை அமைப்பது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகளாகி விட்டன. இத்தகைய அத்துமீறல்கள் திமுக ஆட்சியில் அதிகமாக இருக்கும், அதிமுக ஆட்சியில் மிக அதிகமாக இருக்கும் என்பதைத் தவிர இந்த இரு கட்சிகளுக்கு இடையில் வித்தியாசம் கிடையாது. இந்த கலாச்சாரத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான்.

அரசியல் கட்சிகள் மட்டும் தான் கட்-அவுட் கலாச்சாரத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கூற முடியாது. புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றில் நடித்த நடிகர்களின் கட்-அவுட்களை பிரமாண்டமாக அமைத்து அவற்றுக்கு வழிபாடு நடத்துவதும், பல்வேறு வகையான அபிஷேகங்களை செய்வதும் வழக்கமாகி விட்டன. அரசியல் கட்சிகள் அமைக்கும் கட்-அவுட்களால் மக்களுக்கு இடையூறு மட்டுமே ஏற்படும் நிலையில், நடிகர்களுக்காக அமைக்கப்படும் கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்யும் போது அப்பாவி ரசிகர்கள் தவறி விழுந்து இறக்கும் நிகழ்வுகளும், காயமடையும் நிகழ்வுகளும் நடப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். இந்த அபத்தங்களுக்கும், கொடுமைகளுக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முடிவு கட்டும் என்பதால் அத்தீர்ப்பை எத்தனை முறை வேண்டுமானாலும் வரவேற்று பாராட்டலாம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கட்-அவுட் கலாச்சாரம் தலைவிரித்தாடுவது தமிழகத்தில் மட்டும்தான். தமிழகத்திற்கு வெளியே எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு இதுபோன்ற கட்-அவுட்டுகள், பேனர்கள் போன்றவற்றை பார்க்க முடிவதில்லை. பாலங்களும், சுவர்களும் வெள்ளை அடிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் தான் பொது இடங்கள் விளம்பரங்களாலும் சுவரொட்டிகளாலும் கெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்-அவுட் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று பாமக தொடங்கிய நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். அதிமுக, திமுக நிகழ்ச்சிகளின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டால் அதற்கு எதிரான குரல் பாமகவிடமிருந்து தான் வரும் என்பது பொதுமக்கள் அறிந்த ஒன்றாகும். இதை சொல்லில் மட்டுமின்றி செயலிலும் பாமக கடைபிடித்து வருகிறது. பாமக நிகழ்ச்சிகளில் கட்-அவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வக்கோளாறு காரணமாக இந்தத் தடையை மீறிய பாமக நிர்வாகிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடப்பட்ட வரலாறும் உண்டு.

உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பதாகை வைக்கக்கூடாது என்ற தடையை விரிவாக்கி யாருக்கும் கட்-அவுட், பதாகை அமைக்கக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டால் அது முழுமையானதாக இருக்கும். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட விபரீத செயல்களில் ஈடுபடுவதை விடுத்து, இத்தீர்ப்பை உறுதியாக செயல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். இத்தடையை விரிவாக்கி கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x