Published : 27 Oct 2017 01:15 PM
Last Updated : 27 Oct 2017 01:15 PM

டெங்குவை கட்டுப்படுத்துகிறேன் என்று பொதுமக்கள் மீது அபராதம் விதித்து அச்சுறுத்துவதா?- ராமதாஸ் விமர்சனம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை விட, பொதுமக்களை அச்சுறுத்தி அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலையும், கொசுக்கள் மூலம் பரவும் மற்றக் காய்ச்சல்களையும் இன்று வரை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் கொசுக்களை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பைப் பெற முடியாதது தான்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு மாறாக, அவர்களை அச்சுறுத்தி ஒத்துழைப்பை பெறத் துடிப்பது தான் இந்த விஷயத்தில் தோல்விக்கு காரணமாகும்.

கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வசதியாக சுற்றுச்சூழலை மோசமாகப் பராமரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. கொசுக்கள் உற்பத்தியாவதைத் தெரிந்தே தடுக்கத் தவறிய நிறுவனங்கள், தனிநபர்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதில் தவறில்லை.

ஆனால், இப்படி ஓர் அறிவிப்பை அரசு வெளியிட்ட நாளில் இருந்து, டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு, மக்களுக்கு அபராதம் விதிப்பதையே தங்களின் முதன்மைப் பணியாக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது, வீடுகளில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை கொட்டுவது போன்ற விளம்பரம் தேடும் நடவடிக்கைகளில் தான் அதிகாரிகள் ஈடுபடுகிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்குவதில்லை.

தமிழகத்தில் பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதனால் அந்த நீரை தொட்டிகள்- பாத்திரங்களில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு என்ற பெயரில் கொட்டி வீணடிப்பதை விட பெரிய அபத்தம் எதுவுமிருக்க முடியாது.

வேலூரில் வீட்டில் சாதாரண உடையில் இருந்த பெண் மருத்துவரின் வீட்டுக்குள் ஆய்வு என்ற பெயரில் பெரும் படையுடன் மாவட்ட ஆட்சியர் நுழைய முயன்றதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவரை ஆட்சியர் மிரட்டியதுடன், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்ய வைத்ததும் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்துமே தவிர ஒத்துழைப்பை உருவாக்காது.

டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மக்களை பங்காளிகள் ஆக்குவதன் மூலம் தான் சாதிக்க முடியுமே தவிர, பகையாளிகளாக மாற்றுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. இதை உணர்ந்து மக்களின் ஒத்துழைப்புடன் டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x