

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தை குடிசை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்றவும், சொந்த வீடற்றவர்கள் இல்லாத நிலையை உருவாக்கவும் நாட்டிலேயே முதன்முறையாக காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
முதன் முதலில் இத்திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இருந்த குடிசை வீடுகளின் தீ விபத்து குறைந்ததற்கு இத்திட்டம் ஓர் காரணம். இந்நிலையில் மத்திய அரசு மூலம், ‘பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்’ கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி, 2017-ம் ஆண்டு முதல் இத்திட்டம் புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
2018-ம் ஆண்டு காமராஜர் கல்வீடு கட்டும் திட்டமும், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு பிரதமர் வீடு கட்டும் திட்டமாக அமல்படுத்தப்பட்டது. அதன்படி பயனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், மாநில அரசு சார்பில் ரூ.2 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வீடு கட்டும் மானியமாக வழங்கப்பட்டது. தற்போது மானிய உதவி தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இது குறித்து ஏழை மக்கள் கூறுகையில், "கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டுக்கு முன்பு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படாமல் உள்ளது. பழமையான வீடுகளில் வசிப்பவர்கள் இத்திட்டத்தில் நிதியுதவி கேட்டால், வீட்டை இடித்தால்தான் நிதியுதவி தரப்படும் என்றனர். அதை நம்பி வீட்டை இடித்தவர்களுக்கும் நிதியுதவி கிடைக்கவில்லை.
அதனால், வாடகைக்கு குடியிருக்கும் சூழல் உள்ளது. கடந்த காலங்களில் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைவருக்கும் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தை பிரதம மந்திரி அவாஸ் யோஜான திட்டத்துடன் இணைத்த பின் பல்வேறு காரணங்களை கூறி விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர்.
குடிசை, ஓடு வீடுகள், காலிமனைகள் இருந்தால் போதும் வீடு கட்ட முன்பு கடனுதவி வழங்கினர். தற்போது வீடு, காலி மனை எதுவாக இருந்தாலும் நிதியுதவி பெறும் பத்திரத்தில் உள்ள இடத்தில் கடக்கால் போட்டால் மட்டும் தான் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. பயனாளிகள் இருக்கும் வீடுகளை இடித்து விட்டு கடக்கால் போட்டுவிட்டு காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை நிதியுதவி வழங்காததால் கடக்காலில் உள்ள கம்பி உள்ளிட்ட பொருட்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் மத்திய அரசால் பரிசீலனை செய்த பின்னரே விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாகக்கூறி காலம் தாழ்த்துகின்றனர் " என்றனர்.
10,300 பயனாளிகள்: இது சம்பந்தமாக துறை வட்டாரங்களில் கேட்டபோது, "காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தையும், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தையும் இணைத்து இதுவரை 10,300 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த 14 ஆயிரம் பயனாளிகளில் 4 ஆயிரம் பயனாளிகள் நிதியுதவி பெற முன்வரவில்லை.
ஆகையால் புதிதாக விண்ணப்பித்த பயனாளிகளுக்கு நிதியுதவி தருவதற்கு முன்பாக, நிதியுதவி பெற விண்ணப்பித்து நிதியுதவி பெறாத பயனாளிகளை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக விண்ணப்பித்த 1,500 பயனாளிகளின் விண்ணப்பங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது 4 ஆயிரம் பயனாளிகளில் 2,500க்கும் மேற்பட்ட பயனாளிகளை கண்டுபிடித்து பட்டியலில் இருந்து நீக்கியுள்ளோம். மேலும் உள்ளோரை நீக்கியவுடன்தான் புதிய பயனாளிகளுக்கு நிதியுதவி தரப்படும். ஓரிரு மாதங்களில் இப்பணி முடியும்" என்றனர். "சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்து மூன்று மாதங்களாகின்றன.
இத்திட்டப்படி பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனடையாத குடிசையில் வசிக்கும் புதிய பயனாளிகளுக்க ரூ.3.50 லட்சம் குடிசை மாற்று வாரியம் மூலம் வழங்கப்படும். குடிசையில் வாழும் அட்டவணை, பழங்குடியின மக்களுக்கு ரூ.5 லட்சம் வீடு கட்ட உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.
துறை அமைச்சரும், அதிகாரிகளும் ஏழை மக்களின் வலியை உணரவே இல்லை" என்று இப்பிரச்சினையை உற்றுநோக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.