Published : 21 Jun 2023 06:54 PM
Last Updated : 21 Jun 2023 06:54 PM
கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய நீராதாரம் ஆகும். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த ஏரி காத்து வருகிறது.
அதோடு இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 14 கி.மீ நீளமுள்ள உலகிலேயே மிகப்பெரிய, மனித உழைப்பினால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஏரி இது. அந்தக் காலத்தில் சாதாரணமாக செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு, இந்த வேலையை போர் வீரர்கள் செய்துள்ளனர்.
முதலாம் பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தன் தக்கோலம் போருக்குச் செல்லும் வழியில் ‘வட காவிரி’ என அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க எண்ணினான். தனது வீரர்களுக்கு ஏரியை வெட்ட உத்தரவிட்டான். பாதியிலேயே போருக்கு புறப்பட்ட ராஜாதித்தன், ஏரியை வெட்டி முடித்ததும் தன் தந்தையின் வீரப்பெயர்களில் ஒன்றான ‘வீரநாராயணன் ஏரி’ பெயரைச்சூட்ட வேண்டும் என்று கூறிவிட்டு சென்றான். ராஜாதித்தன் போரில் உயிரிழந்தான்.
1011- 1037 ஆண்டுகளுக்கிடையே ஏரி வெட்டி முடிக்கப்பட்டது. ராஜாதித்தனின் விருப்பப்படியே ஏரிக்கு ‘வீர நாராயணன் ஏரி' என்றும் பெயரிடப்பட்டது. காலப்போக்கில் இந்த ஏரியின் பெயர் ‘வீராணம் ஏரி' என்று மருவியது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர்188 கி.மீ பயணித்து கல்லணைக்கு வந்து சேர்ந்து, கல்லணையில் இருந்து கொள்ளிடத்தின் வழியாக 81 கி.மீ பயணித்து, கீழணையை வந்தடைந்து, அங்கு தேக்கப்பட்டு வடவாறு வழியாக 22 கி.மீ பயணித்து வீராணம் ஏரிக்கு வந்து சேரும் வகையில் அமைந்திருக்கிறது.
1,100 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு கொண்ட, இந்த பரந்து விரிந்த வீராணம் ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்த சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் மொத்த அகலம் 5.6 கி.மீ. ஏரியின் பரப்பளவு 15 சதுர மைலாக உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடியாகும். ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் (1.465 டி.எம்.சி) கன அடியாகும்.
ஏரியின் கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஏரியை வெட்டிய ராஜாதித்த சோழனுக்கு ஏரிக்கரையில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி விவசாயிகளிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இது குறித்து வீராணம் ஏரி ராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் ரெங்கநாயகி கூறுகையில், “மண்மேடாகவும், காடாகவும் கிடந்த இடத்தை போர் வீரர்களை கொண்டு வெட்டி ஏரியை உருவாக்கி விவசாயிகளின் காவலனாக திகழ்ந்த ராஜாதித்த சோழனுக்கு வீராணம் ஏரிக்கரையில் சிலை வைக்க வேண்டும் என்று பல முறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை. அரசு உடனடியாக ராஜாதித்தனுக்கு சிலை வைக்க வேண்டும். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT