

புதுச்சேரி: பஸ் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த 2 குழந்தைகள் அபாயக் கட்டத்தை தாண்டினர் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். பள்ளி நேரத்தை மாற்றியமைக்க ஆலோசிப்பதாகவும் தெரிவித்தார்.
புதுவை நகர பகுதியில் இயங்கி வரும் குளூனி பள்ளிக்கு வில்லியனுார், கோபாலன்கடை, அரும்பார்த்தபுரம், மூலக்குளம் பகுதிகளைச் சேர்ந்த எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் நேற்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்தனர். ஆட்டோ புஸ்சி சாலை, ரோஸ்மா திருமண நிலையம் அருகே வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த பஸ் மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பக்கம் சேதமடைந்தது. ஆட்டோவில் இருந்த 8 குழந்தைகள், டிரைவர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூலக்குளத்தை சேர்ந்த மரிஜெபாஸ்டின் மகள் நிக்கிஷா, சதீஷ்குமார் மகள் அவந்திகா ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்திருந்தனர். இந்தக் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. இதில் அவந்திகா பேசினார். ஆனால் நிக்கிஷா பேசவில்லை, அவருக்கு வலிப்பும் ஏற்பட்டது. இதனால் பெற்றோர்கள் பதட்டமடைந்தனர். தங்கள் குழந்தையை சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
குழந்தைகளை பார்வையிட வந்த ஆளுநர் தமிழிசை, சென்னைக்கு அழைத்துச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும் என்பதாலும், அரசு மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால், தொடர்ந்து இங்கேயே சிகிச்சை அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து நிக்கிஷாவுக்கு நேற்று தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு இரவு 9 மணிக்கு மேல் நிக்கிஷா பேசினார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மற்ற குழந்தைகளும் அரசு மருத்துவமனாயில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று யோகா விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிக்கிஷாவை பார்த்தார். அந்த குழந்தையிடம் நலம் விசாரித்து, என்ன சாப்பிட்டாய்? என கேட்டார். அங்கிருந்த நிக்கிஷாவின் பெற்றோர், "நீங்கள் கூறாவிட்டால், நாங்கள் சென்னைக்குத்தான் சென்றிருப்போம்" என தெரிவித்தனர். ஆளுநர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு உட்பட பல பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆளுநர் கூறுகையில், "நேற்று நடந்த விபத்தில் 2 குழந்தைகள் படுகாயமடைந்திருந்தனர். அதில் நிக்கிஷாவின் பெற்றோர் சென்னைக்கு அழைத்துச்செல்ல விரும்பினர். அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கேயே அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என வலியுறுத்தினேன். இதைத்தொடர்ந்து நரம்பியல் நிபுணர்கள் 5 நிமிடத்துக்குள் அழைக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சையும் நடந்தது. தற்போது அந்த குழந்தைக்கு நினைவு திரும்பி நல்ல உடல்நிலையோடு ஆரோக்கியத்தோடு உள்ளார். குழந்தைகள் அபாய கட்டத்தை தாண்டியுள்ளனர்.
விபத்துக்கு யார் காரணம் என எனக்கு தெரியாது. நேற்று ஆட்டோ சென்றபோதுகூட பெரியளவில் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஒரு ஆட்டோவில் 8 பேரா பயணிக்கின்றார்களா எனகேட்டபோது, இல்லை 15 பேர் வரை செல்வதாக கூறுகின்றனர். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளிலும் மாணவர்கள் எதில் வருகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். ஒரே நேரத்தில் பள்ளிகள் தொடங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். ஆட்டோ டிரைவர்களுக்கு கண் உட்பட உடல்நல பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.