

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்து தொண்டை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.
இந்த அரசு தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி அருகாமையில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 300 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புறநோயாளியாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளாகவும் நூற்றுக் கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த மருத்துவமனையில் அவரச சிகிச்சை மையம் அருகே நுண்கதிர் சிகிச்சை மையம் செயல்படுகிறது. இந்த நுண் கதிர் சிகிச்சை மையத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் வழங்கப்பட்ட எக்ஸ்ரே கருவிகள்பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையுடன் மருந்து பற்றாக்குறையும் நிலவுவதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகரம் சென்னைக்கு அருகே பெரிய அளவில் வளர்ந்துள்ள மாநகரம், தொழில் நிறுவனங்கள் அதிகம்வந்த உடன் மக்கள் குடியேற்றமும் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் மருத்துவமனை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
இது குறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெத்துராஜ் கூறியதாவது: முதலில் இந்த மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடுகள் உள்ளன. மருத்துவமனை மேம்படுத்தப்படாமல் இருப்பதற்கு இதுவே முதல் காரணம். இங்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் முறைப்படி அளிக்கப்படுவதில்லை.
இங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வருபவர்களை சென்னைக்கும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகின்றனர். இதனால் இங்குள்ள அவசர ஊர்திகள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இதனால் தனியார் அவசர ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளே புகுந்து மருத்துவமனைக்குள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பாம்புக்கடி போனறவற்றுக்கு கூட மருந்து இல்லாத நிலை உள்ளது.
சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவ நிபுணர்கள் இல்லை.உரிய மருத்துவ நிபுணர்கள், போதிய செவிலியர்களை நியமிக்க வேண்டும். நோயின் தீவிரத் தன்மையைஆராய்ந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து உயர் சிகிச்சைகளும் அளிக்க வேண்டும்.
மேலும் மருத்துவமனையில் அடிக்கடி பொருட்கள் திருடு போவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் கொடுக்காததால் அவர்கள் நோயாளிகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கினால்தான் அவர்கள் திருப்தியுடன் பணிபுரிவர். இவ்வாறு கூறினார்.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரியிடம் கேட்டபோது, "இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே இரு பிரிவுகளில் இரண்டு எக்ஸ்ரே இயந்திரங்கள் உள்ளன. அவை நல்ல முறையில் வேலை செய்கின்றன. பழுதானது தனியார் நிறுவனம் மூலம் நன்கொடையாக கொடுத்த இயந்திரம். அதனை சரி செய்யும் படி அந்த நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளோம்.
அவர்களும் சரிசெய்வதாக உறுதி அளித்துள்ளனர். அதேபோல் மருத்துவமனைக்கு தேவையான ஊழியர்களும்உள்ளனர். மருத்துவமனையில் எந்த பிரச்சினையும் இல்லை.அனைத்து வசிகளுடன் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.