Published : 21 Jun 2023 05:35 PM
Last Updated : 21 Jun 2023 05:35 PM
சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் உள்ள கூவம், அடையாறு,பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட 30 சிறு கால்வாய்கள் உள்ளன. இவை மழை காலத்தில் மழைநீரை வழிந்தோடச் செய்வதில் முக்கியபங்கு வகிக்கின்றன.
இந்த கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள், குப்பைகள் கொட்டப்பட்டதால் அகலம் குறைந்து, மழைநீர் கொள்திறனும் குறைந்திருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டன. இவற்றில் மழை காலங்களில் அதிகமாக செல்லும் நீர், கால்வாய்களில் செல்ல முடியாமல், அவற்றுடன் மாநகராட்சி இணைத்துள்ள மழைநீர் வடிகாலில் சென்று,குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வந்தது.
குறிப்பாக, சென்னை புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் மழை குறைவாக பெய்தாலும், ஓட்டேரி நல்லா கால்வாயின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் கால்வாயில் அதிகமாக வெள்ளநீர் செல்லும்போது அவை புளியந்தோப்பு குடியிருப்பு பகுதிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை, கணேசபுரம் சுரங்கப்பாலம் பகுதியில் மழைநீர் தேக்கத்தையும், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு இதை கண்டறிந்து, மழைநீர் வடிகால்கள், மழைநீர் கால்வாய்களுடன் இணையுமிடத்தில் கதவணைகளை அமைத்து, கால்வாய்களில் இருந்து குடியிருப்புகளுக்கு மழைநீர் வடிகால் வழியாக நீர் செல்வதை தடுக்கலாம். கால்வாய்களில் செல்லும் நீர் குறைந்த பிறகு, கதவணைகளை திறந்து, வடிகாலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றலாம் என மாநகராட்சிக்கு ஆலோசனை வழங்கியது.
அதன்படி ஓட்டேரி நல்லா, கூவம் ஆறு போன்றவற்றில் மழைநீர் வடிகால்கள் இணையுமிடங்களில் 40-க்கும் மேற்பட்ட கதவணைகள் நிறுவப்பட்டன. ஆனால் சென்னையில் இரு தினங்களுக்கு முன்புபெய்த கனமழையின்போது பல இடங்களில் தகவணைகள் இயக்கப்படவே இல்லை.
குறிப்பாக, புளியந்தோப்பு பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாயுடன் மழைநீர் வடிகால் இணையுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலின் கதவணை நேற்று முன்தினம் அடைக்கப்படவே இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கால்வாயில் சென்ற வெள்ளம், மழைநீர் வடிகால் வழியாக புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை, டாக்டர் அம்பேத்கர் சாலை, ஸ்டீபன்சன் சாலை, பட்டாளம் ஸ்ட்ராஹன்ஸ் சாலை பகுதியில் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அங்கு ஆய்வு செய்ய வந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைசெயலர் சிவ்தாஸ் மீனாவின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, அவர் மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமானிடம் விசாரித்தார். கால்வாயில் அதிக நீர் வந்தபோது அடைத்துவிட்டோம்.
இப்போது குறைந்துவிட்டதால் கதவை திறந்துவிட்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கதவு, பல மாதங்களாக இயக்கப்படாமல், துருப்பிடித்து கிடப்பதாகவும், நேற்று இயக்கியதற்கான சுவடே இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெள்ள பாதிப்பை சரி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின்படி கதவணையை இயக்காததால், அந்த திட்டம் சரியாக செயல்படுகிறதா இல்லையா என்பதைக் கூட அறிய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அடுத்த மழைக்காவது உரிய வகையில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு மழைநீர் தேக்கத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT