Published : 21 Jun 2023 05:55 AM
Last Updated : 21 Jun 2023 05:55 AM

சாலை வரியை உயர்த்த திட்டம் - பழனிசாமி, ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் வரை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு என்றுஅரசுக்கு வரும் வரி வருவாய்களைஉயர்த்தி, மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சாலை வரியை தற்போது 5 சதவீதம் வரை உயர்த்தமுடிவெடுத்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழக மக்களிடம் இருக்கும் கடைசி ரூபாயையும் பிடுங்கும்நோக்கத்தில் இந்த திமுக அரசுசெயல்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. சாலை வரியை உயர்த்தி வாகனங்களின் விலையை மேலும் உயர்த்த திமுகஅரசு வழிவகை செய்கிறது. சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் விதமாக சாலை வரியை உயர்த்தமுடிவெடுத்திருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சாலை வரியை உயர்த்ததிட்டமிட்டிருப்பது ஏற்புடையதல்ல. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். போக்குவரத்து துறையின் சாலை வரியில் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இது போக வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்துகின்றனர். இப்படி சாலை வரி, சுங்கக் கட்டணம் ஆகியவற்றால் ஏற்கெனவே வாகனம் வைத்திருப்பவர்களுக்கு சுமை இருக்கும்போது சாலை வரி உயர்வு நியாயமில்லை. எனவே, தமிழக அரசுசாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x