Published : 24 Oct 2017 08:26 AM
Last Updated : 24 Oct 2017 08:26 AM

ராஜஸ்தான் அரசின் சட்ட திருத்த மசோதா ஏற்கக் கூடியதல்ல: மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான புகார்கள் மீது, இனி முன்அனுமதி பெறாமல் எந்தவொரு விசாரணையும் செய்யக்கூடாது. இதுதொடர்பாக ஊடகங்களும் முன் அனுமதியின்றி செய்தியும் வெளியிடக்கூடாது என ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளக்கூடாத ஒன்று என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவி்த்துள்ளனர்.

1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ராஜஸ்தான் அரசு புதிதாக ‘2017-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசர சட்டம்’ என்ற ஒரு சட்ட மசோதாவை நேற்று தனது சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமி்ன்றி பாஜக எம்எல்ஏ ஒருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி, குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது அரசின் முன் அனுமதியின்றி எந்தவொரு விசாரணையும் செய்ய முடியாது. குறி்ப்பாக ஊடகங்களில் செய்தி வெளியிடக்கூடாது. 180 நாட்கள் அவகாசத்தில் அனுமதி தொடர்பாக அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் அதன்பிறகு அனுமதி அளிக்கப்பட்டதாக கருத்தில் கொள்ளலாம் என்பது இந்த சட்ட மசோதாவின் சாரம்சம்.

மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.குமார் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ஏற்கெனவே அரசு ஊழியர்களை பாதுகாக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 197 உள்ளது. அந்த சட்டத்தின்படி குற்றச்சாட்டின் தன்மையைப் பொருத்து முன்அனுமதி பெற்ற பிறகே அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது விசாரணை செய்யவோ முடியும். அப்படி ஒரு சட்டப்பிரிவு இருக்கும்போது கூடுதலாக அரசு ஊழியர்களை பாதுகாக்க இன்னொரு அவசர சட்டம் தேவையா?

ஏற்கெனவே இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முன்அனுமதி பெற வேண்டும் என இருந்த டெல்லி சிறப்பு காவல் சட்டத்தையே உச்ச நீதிமன்றம் செல்லாது என அறிவித்து வி்ட்டது. அப்படி இருக்கும்போது ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசர சட்டத்தின் நிலைப்புத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல ஒவ்வொரு மாநில அரசும் தனித்தனியாக சட்டம் கொண்டு வந்தால் எந்த ஊழல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறும்போது, “பொது ஊழியர்கள் என்ற வரையறைக்குள் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் அடங்குவர். அப்படியிருக்கும்போது நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் என மக்கள் பணத்தில் மக்களுக்காக சேவை செய்யும் யாரும் இனி குற்றச்சாட்டில் சிக்கினால் அவர்கள் மீது எந்த விசாரணையும் செய்ய முடியாது என்றால், இது அந்த அரசு அந்த மாநில மக்களுக்கு செய்யும் துரோகம். சட்ட ரீதியாக தடை ஏற்படுத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடாத ஒன்று. யாராக இருந்தாலும் சரி குற்றச்சாட்டுக்கு உள்ளானால் அனைவருமே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x