

திருச்சி: கிராம மக்களிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் குறித்து தரக்குறைவாக பேசிய மின்வாரிய இளநிலை பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி சமத்துவபுரம் முத்து மாரியம்மன் கோயிலுக்கு மின் இணைப்பு வேண்டி அளித்த விண்ணப்பம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்லக்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலைப் பொறியாளரான ஆர்.ஸ்ரீதரை அண்மையில் சந்தித்து கேட்டுள்ளனர்.
அதற்கு உதவிப் பொறியாளர் ஸ்ரீதர், “கோயிலுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் ஆட்சேபணை இல்லை என்ற கடிதத்தை பெற்று வந்தால்தான், மின் இணைப்பு தர முடியும். வருவாய்த் துறை முழுவதும் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அவரது (ஆட்சியரை ஒருமையில்) சட்டையைப் பிடித்து இழுத்து கடிதத்தை வாங்கி வாருங்கள். நானே இணைப்புக்கான கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பு தருகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிராம மக்களுக்கும், இளநிலை பொறியாளர் ஸ்ரீதருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.
இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தவுடன், உதவிப் பொறியாளர் ஆர்.ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.பிரகாசம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.