Published : 02 Oct 2017 07:21 AM
Last Updated : 02 Oct 2017 07:21 AM

எம். சாண்ட் மணல் தயாரிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய டாமின் திட்டம்: மணல் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்க அனைத்து மாவட்டங்களிலும் எம்.சாண்ட் தயாரிப்பு குறித்து டாமின் விரைவில் ஆய்வு நடத்தவுள்ளது. முதல் கட்டமாக அரக்கோணம் அருகே சுமார் 50 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே சுமார் 50 ஹெக்டர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தியுள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வாய்ப்புள்ள இடங்களில் எம்.சாண்ட் மணல் தயாரிப்பது குறித்து ஆய்வு நடக்கவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழ்நாடு கனிம நிறுவனம் 1979-ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கனிம வளங்களை கண்டுபிடித்தல், வெட்டி எடுத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு பாலிஷ் செய்யவும், தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கவும் சிறப்பு தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன. குவாரி மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் அரசுக்கு படிப்படியாக வருவாய் அதிகரித்து வந்தது.

ஆனால், சமீபகாலமாக சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் மந்தமாக செயல்படுகின்றன. சில இடங்களில் பல மாதங்களாக தொழிற்சாலைகள் செயல்படாமல் இருக்கின்றன.

தமிழகத்தில் தற்போது மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படும் ஜல்லி தயாரிக்கும் வளம் இருந்தாலே போதும். எம்.சாண்ட் தயாரிக்க முடியும். தற்போது, இதற்கான பணியை தொடங்க தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் எம்.சாண்ட் தயாரிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வளம் இருக்கிறது.

முதல்கட்டமாக வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே சுமார் 50 ஹெக்டர் நிலம் தேர்வு செய்துள்ளோம். இதில், எம்.சாண்ட் தயாரிப்பதற்கான ஆய்வு பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம். இதுபோல், தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமாக பயன்படுத்தாமல் இருக்கும் நிலத்தை தேர்வு செய்து எம்.சாண்ட் தயாரிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளோம். ஆய்வுகளின் முடிவு அடிப்படையில் இறுதிசெய்து, எம்.சாண்ட் உற்பத்தியை தொடங்குவோம். இதன் மூலம் தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நீங்கும், தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x