பாஜக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் கிருபாநிதி காலமானார்: ராமதாஸ், தலைவர்கள் இரங்கல்

பாஜக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் கிருபாநிதி காலமானார்: ராமதாஸ், தலைவர்கள் இரங்கல்
Updated on
1 min read

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் மருத்துவருமான எஸ்.பி.கிருபாநிதி நேற்று கடலூரில் காலமானார்.

கடலூரில் வசித்து வந்த கிருபாநிதி (90) கடந்த 1989-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். முதலில் கடலூர் மாவட்டத் தலைவராகவும், பின்னர் மாநில துணைத் தலைவராகவும் இருந்தார். அக்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் செயல்பட்டார்.

மருத்துவரான இவர் எம்.எஸ்., எப்.ஐ.சி.எஸ். பட்டங்கள் பெற்றவர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். நேற்று அவர் காலமானார்.

எஸ்.பி.கிருபாநிதி மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

எஸ்.பி.கிருபாநிதி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். மறைந்த மருத்துவர் கிருபாநிதி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். ஏராளமான நிகழ்ச்சிகளில் என்னுடன் அவர் கலந்துகொண்டிருக்கிறார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்கியவர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றியவர். மனிதர்களை நேசித்தவர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதுதவிர பாஜக முக்கிய பிரமுகர்கள், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in