பேரவையில் கடும் அமளி: திமுகவினர் கூண்டோடு சஸ்பெண்ட் - பேரவைத் தலைவர் தனபால் உத்தரவு

பேரவையில் கடும் அமளி: திமுகவினர் கூண்டோடு சஸ்பெண்ட் - பேரவைத் தலைவர் தனபால் உத்தரவு
Updated on
2 min read

சட்டப்பேரவையில் வருவாய்த் துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கூட்டத் தொடர் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் லாசர் (மார்க்சிஸ்ட்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), எ.வ.வேலு (திமுக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), செந்தில்குமார் (தேமுதிக), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ரங்கராஜன் (காங்கிரஸ்) ஆகியோர் பேசினர்.

விவாதத்துக்கு பதிலளித்து வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

தமிழகத்தில் வறட்சி, வெள்ளம், சுனாமி எது வந்தாலும் வேகமாகச் செயல்பட்டு மக்கள் நலனுக்காக பணிபுரிபவர் நமது முதல்வர். தமிழகத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1,311 கோடி நிவாரண நிதியை வாரி வழங்கி, வறட்சியில் புரட்சி ஏற்படுத்தினார். சுனாமி ஏற்பட்டபோது உலகமே பயந்து நடுங்கிய நிலையிலும் தன் உயிரைக்கூட பெரிதாக நினைக்காமல் அந்தப் பகுதிகளுக்குச் சென்று உதவியவர் நம் முதல்வர். சுனாமியைவிட வேகமாக அவர் செயல்பட்டதை இந்த உலகமே பாராட்டியது. ஆனால் திமுகவினரோ ஓடி ஒளிந்து கொண்டனர்.

இவ்வாறு அமைச்சர் கூறியதும், திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்வரிசையில் இருந்த சிலர், முன்வரிசையை நோக்கி ஓடிவந்து அமைச்சருக்கு எதிராக குரல் கொடுத்தனர். சிலர், பேரவைத் தலைவர் இருக்கை அருகே சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் தங்கள் இடத்தில் நின்றபடியே குரல் எழுப்பினர். பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று திமுகவினருக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கைகளை நீட்டி காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சுமார் 10 நிமிடங்கள் கூச்சல், குழப்பம் நிலவியது.

அப்போது பேரவைத் தலைவர் எழுந்து, ‘‘சபை நடவடிக்கை களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். அவர்கள் சபை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்தார்.

அதன்பிறகும் திமுகவினர் கோஷம் போட்டபடியே இருந்ததால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து சபை காவலர்கள் வந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றினர். ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் பேரவைத் தலைவர் இருக்கை அருகே தரையில் அமர்ந்து கொண்டனர். அவர்களை காவலர்கள் குண்டுகட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள், லாபியில் நின்றபடி கோஷம் போட்டனர். அங்கிருந்தும் அவர்களை வெளியேற்றும்படி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை பிற்பகலிலும் தொடர்ந்தது. அதிமுக உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பேசி முடித்த பிறகு பேரவைத் தலைவர் ப.தனபால் ஓர் அறிவிப்பை வெளியிட்டு கூறியதாவது:

திமுக உறுப்பினர்கள் வேண்டு மென்றே திட்டமிட்டு, பேரவைத் தலைவரின் ஆணையையும் மீறி, அவரது இருக்கைக்கு அருகில் வந்து குழுவாக அமர்ந்துகொண்டு மறியல் நடத்தும் நோக்குடன் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தனர். அவையை நடத்தவிடாமல், தொடர்ந்து திட்டமிட்டு குந்தகம் விளைவித்ததால் பேரவையில் இருந்து அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தொடரில் 4-வது முறையாக திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரவை விதி எண் 120-ன் கீழ் ஒரு உறுப்பினர் இரண்டு முறைக்குமேல் வெளியேற்றப்பட்டால் அவர் அந்தக் கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள இயலாது. திமுக உறுப்பினர்கள் 2-வது முறையாக வெளியேற்றப்பட்டபோதே, கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள இயலாது என அறிவித்திருக்கலாம்.

ஆனால், அவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தால் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து வேண்டுமென்றே அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்து, 4-வது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளதால், திமுக உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள இயலாது.

இவ்வாறு பேரவை தலைவர் தனபால் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in