Published : 29 Oct 2017 01:02 PM
Last Updated : 29 Oct 2017 01:02 PM

மொபைல்போன் அதீத பயன்பாட்டால் குழந்தைகளுக்கு கண் புற்றுநோய் அபாயம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

குழந்தைகள் செல்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால், அவர்களுக்கு கண் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில், இந்திய கண் சீரமைப்புச் சங்கத்தின் 28-வது தேசிய மாநாடு, கடந்த 27-ம் தேதி தொடங்கி நடக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் மாநாட்டில் அமெரிக்கா, மலேசியா, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 360-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் அரவிந்த் கண்காப்பு மைய மனிதவளத் துறை கவுரவத் தலைவர் டாக்டர் ஜி. நாச்சியார், அரவிந்த் கண் சீரமைப்புத் துறை தலைவரும், கண் சீரமைப்பு சங்கச் செயலாளருமான டாக்டர் உஷாகீம், மருத்துவர்கள் லட்சுமி மகேஷ், முகேஷ் ஷர்மா, வெங்கடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உஷாகிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த மாநாட்டில் கண் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. கண் மருத்துவ விரிவுரைகள், விவாதங்கள், ஆய்வறிக்கைகள், அனுபவங்கள், யோசனைகள் பகிரப்பட்டன. இந்திய கண் சீரமைப்பு சங்கம் 1987-ம் ஆண்டு இந்திய கண் குழிவுச் சங்கமாக தொடங்கப்பட்டது.

தற்போது கண் குழி, கண் சீரமைப்பு, செயற்கை கண் ஆகிய துறைகளில், சர்வதேச அளவில் மருத்துவர்களை இந்த சங்கம் ஒருங்கிணைக்கிறது.

மதுரையில் இலவச சிகிச்சை

அதனால், சர்வதேச தரத்திலான அறுவை சிகிச்சைகளை மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக செய்ய முடிகிறது. கண் பார்வையில் தொந்தரவு ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவதில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. நெஞ்சுவலி ஏற்பட்டால் உயிர் அச்சத்தில் உடனே மருத்துவமனைக்கு செல்கிறோம். அதுபோலத்தான், பார்வையும் முக்கியம். கண் சிகிச்சைகளுக்கு செலவினம் அதிகமாக இருப்பதால், மக்களுக்கு கண் அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. அதனால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முடிந்தளவு அரவிந்த் கண் மருத்துவமனை இலவசமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது.

கண்புற்று நோய் பாதிப்பு

குழந்தைகளுக்கு தற்போது அதிகளவு பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் செல்போன்களை வைத்து நீண்டநேரம் வீடியோ கேம்களை விளையாடுவதால் கண் புற்று நோய் ஏற்படுகிறது. இந்த கண் புற்றுநோய் சமீப காலமாக அதிகளவு கண்டுபிடிக்கப்படுகிறது. முன்பும் இந்த நோய் பாதிப்பு அதிகளவு இருந்திருக்கலாம்.

தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அதிகம் பேர் பாதிக்கப்படுவது தெரிய வருகிறது. நூறு நோயாளிகளை பார்த்தால், அதில் 10 சதவீதம் பேருக்கு கண் புற்றுநோய் அறிகுறி காணப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையே பறிபோகும் அபாயம் ஏற்படுகிறது.

சரியான காரணம் கண்டறியப்படவில்லை

செல்போன், கணினி, ஐபேடு பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு, மரபணுக்கள் உள்ளிட்ட பல காரணங்களால் கண் புற்றுநோய் ஏற்படலாம். எதனால் இந்த கண் புற்றுநோய் வருகிறது என்பதை, இன்னும் தெளிவாகக் கூற முடியவில்லை.

கண் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் அளிக்கும் சிகிச்சை, தற்போது அரவிந்த் கண் மருத்துவமனையிலும் அளிக்கப்படுகிறது. கண் குறைபாடுகளை உடனே கண்டுபிடிக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு விழிப்புணர்வு பதாகைகளையும், விளம்பரங்களையும் செய்ய முன்வந்தால் பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x