Published : 12 Oct 2017 10:35 AM
Last Updated : 12 Oct 2017 10:35 AM

ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து என்எல்சி நடத்தும் ஓவியப் போட்டி: பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பலாம்

ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு‘என்எல்சி’ நிறுவனம் மற்றும் ‘தி இந்து’ குழுமம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை நடத்த உள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, அக்டோபர் 30 முதல் நவம்பர் 4-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

இந்த ஆண்டின் மைய கருத்தாக “எனது தொலைநோக்கு திட்டம்: ஊழல் இல்லாத பாரதம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ‘என்எல்சி’ நிறுவனம் மற்றும் ‘தி இந்து’ குழுமம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை நடத்த உள்ளது.

ஓவியத் தலைப்புகள்

இளநிலைப் பிரிவில் (3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்), ஊழல் இல்லாத பாரதம் (Corruption free India ), ஊழல் ஏற்படுவதற்கான வழிகள் (Avenues of Corruption), புன்னகையைப் பரப்ப ஊழலைத் தடுப்போம் (Stop Corruption to spread smiles) ஆகிய தலைப்புகளில் ஓவியங்களை வரைந்து அனுப்ப வேண்டும்.

முதுநிலைப் பிரிவில் (7 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்), ஊழல் இல்லாத பாரதத்தை உருவாக்குவதில் எனது பங்கு (My role for a corruption-free India), ஊழலால் ஏற்படும் பாதிப்புகள் (Ill effects of Corruption), ஊழலின் தொடர்புகளை துண்டித்தல் (Break the corruption chain) ஆகிய தலைப்புகளில் ஓவியங்களை வரைய வேண்டும்.

ஓவியங்களை 26 செமீ x 27 செமீ அளவு கொண்ட தாளில் வரைய வேண்டும். அந்தத் தாளின் பின் பகுதியில், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, வீட்டு முகவரி, கைபேசி எண், பள்ளி அல்லது மாணவரின் மின்னஞ்சல் முகவரி ஆகியற்றை எழுத வேண்டும். இந்த விவரங்கள் இல்லாத ஓவியங்கள் ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் சான்றொப்பம்

ஓவியத்துடன், அந்த மாணவர்தான் ஓவியத்தை வரைந்தார் என்பதற்கான, பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அல்லது பள்ளி ஓவிய ஆசிரியர் அளித்த சான்றொப்பத்தை இணைக்க வேண்டும். அந்த உறையில், “NLC & The Hindu Group Painting Competition 2017” என்று குறிப்பிட்டு, அந்தந்த பகுதிகளில் இயங்கும் ‘தி இந்து’ அலுவலகத்தில், விற்பனைப் பிரிவில் நேரில் வழங்கலாம்.

ஓவியங்களை அக்டோபர் 25-ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 1800 3000 1878 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x