

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இந்து முன்னணி முன்னாள் நகரச் செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில் பாட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவராஜ் (36). இந்து முன்னணி முன்னாள் நகரச் செயலாளர். அப்பகுதியில் தனது சொந்த செலவில் முனீஸ்வரன் கோயில் கட்டி, அதன் தர்மகர்த்தாவாக இருந்தார்.
சனிக்கிழமை அதிகாலை, ஜீவராஜ் தனது வீட்டுவாசலில் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சம்பவ இடத்திலேயே ஜீவராஜ் உயிரிழந்தார்.
இந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி., நரேந்திரன் நாயர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை ஏன்?
ஜீவராஜ் நில புரோக்கராக இருந்துள்ளார். அவர் மீது, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடக்கத்தில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளராக இருந்த ஜீவராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்து முன்னணியில் சேர்ந்து நகரச் செயலாளர் பொறுப்புக்கு வந்தார். நிர்வாகிகள் பலரும் இவர் மீது புகார் கூறியதால், சில மாதங்கள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். ஜீவராஜுக்கு அய்யம்மாள், தேவி என்று 2 மனைவிகளும், இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி தலைவர் கொலை இளைஞரிடம் விசாரணை
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார் (45). கடந்த மாதம் 18-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை அடுத்த கக்கோடு கிராமம்.
இக்கொலை வழக்கில் விசாரணை நடத்த, சென்னையில் இருந்து தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி வந்தனர். அவர்கள், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த முகமது ராபி என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து, சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.