

திருவாரூரில் கலைஞர் கோட்டம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, கருணாநிதி பிறந்த திருவாரூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் மற்றும் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி செல்வி செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்தார். உடல் நலக் குறைவு காரணமாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
“என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டை இது”: “எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு அது திறக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே நான் இதை கருதுகிறேன்" என்று கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
கலைஞர் கோட்டம் என்பது, கலைஞரின் பன்முக பரிணாமங்களைச் சொல்லக்கூடிய கருவூலம். அவரது திருவுருவச் சிலை, முத்துவேலர் நூலகம், இரண்டு அரங்குகள், இரண்டு திரையரங்குகள், பாளையங்கோட்டைச் சிறையில் இருப்பதைப் போன்ற வடிவமைப்பு, செல்ஃபி பாய்ண்ட், கலைஞருடன் படம் எடுத்துக்கொள்ளக்கூடிய வசதி, என அனைத்தும் அடங்கியதாக இந்த கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் விவரித்தார்.
‘நிதிநுட்ப நகரம்’ கட்டுமான பணி ஒப்பந்தம்: அரசு விளக்கம்: சென்னை - நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கு, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் நிறுவனத்துக்கு கட்டுமானப் பணி ஒப்பந்தம் அளித்திருப்பதாக தமிழக பாஜகவினர் உள்ளிட்டோர் வெளியிட்ட தகவலை மறுத்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளின்படி, ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கும் நிறுவனம் கருப்புபட்டியலில் இருப்பது கண்டறிப்பட்டால் மட்டுமே, அந்நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்படும். PST நிறுவனம் கருப்புப் பட்டியலில் இல்லாத நிலையில், PST நிறுவனமும் மற்றும் மற்ற இரு நிறுவனங்களும் சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்று தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்யப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை இதய அறுவை சிகிச்சை நடக்கிறது. இதனை தமிழக மருத்துவ அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது, தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கூறி, செந்திலாபாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டப்பேரவை நேரலைக்கு படிப்படியாக நடவடிக்கை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
‘உலகில் தனக்கான சரியான இடத்தை நோக்கி இந்தியா நகர்கிறது’: மிக உயர்ந்த தகுதியுடன் இருக்கும் இந்தியா, உலகில் தனக்கான சரியான இடம் எதுவோ, அதை நோக்கி நகர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு முன்பு ‘தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மணிப்பூர் வன்முறை: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநில குகி பழங்குடியினரை பாதுகாக்க ராணுவத்தை அனுப்பக் கோரி டெல்லியில் உள்ள மணிப்பூர் பழங்குடினர் அமைப்பு தாக்கல் செய்த மனுவினை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கினை ஜூலை 3-ம் தேதிக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டுள்ளது.
“டெல்லியில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள்... முற்றிலும் பொறுப்பே இல்லை”: தலைநகர் டெல்லியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லி மக்களின் பாதுகாப்பு, அதுகுறித்த நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு உரிய பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் டெல்லியில் சட்டம் - ஒழுங்கை பராமரித்து குற்றங்களைத் தடுப்பதற்கான பொறுப்பில் இருப்பவர்களின் பங்களிப்பு முற்றிலுமாக இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வானிலை முன்னறிவிப்பு: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதன்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.