Published : 15 Apr 2014 00:00 am

Updated : 15 Apr 2014 21:04 pm

 

Published : 15 Apr 2014 12:00 AM
Last Updated : 15 Apr 2014 09:04 PM

பிரச்சாரத்தில் பேசப்படாத வளைகுடா வாழ் தமிழர் நலன்: வேதனையில் வெளிநாடு வாழ் தமிழர்கள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வளைகுடா வாழ் தமிழர் நலன் குறித்து கட்சிகள் அதிகம் பேசாதது குறித்து வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

வெளிநாட்டு இந்தியர்கள் என்போர் இருவகைப்படுவர். ஒருவர் குடும்பம் குட்டிகளோடு வெளிநாட்டில் நிரந்தரமாக தங்கி, ஒரு தலைமுறைக்குப்பின் இந்திய வம்சாவழியினர் என்று அழைக்கப்படுபவர்கள். இன்னொரு வகையினர் சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாய் எந்நேரமும் இந்தியாவுக்குள் திரும்பி வருவோர், சுருக்கமாக சொல்வதென்றால் வளைகுடாவாசியினர், மிகச்சிலரைத் தவிர வளைகுடா வாழ்க்கையை யாரும் விரும்பி ஏற்கவில்லை.


நிரந்தரம் அல்ல

அதிலும் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரமின்மை, மேற்படிப்பறிவு மறுத்தல், படித்தாலும் அரசு வேலை மறுத்தல், வெகுசிலருக்கு விட்டில்பூச்சி மோகம் என வலிய இந்த வாழ்க்கைக்குள் தள்ளப் பட்டவர்கள். இந்தியாவில் உள்ளவர்கள் நினைப்பது போன்று அங்கு வீடு வாங்கவோ, நிலம் வாங்கவோ, நிரந்தர குடியுரிமையோ கிடைக்காது.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பணிஒப்பந்தம் புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் உள்ள அரசு அல்லது வேலைபார்க்கும் நிறுவனத்தினர், எப்போது இந்தியாவுக்கு போ என்று சொல்லுவார்கள் என்று தெரியாது. எப்போது சொன்னாலும் அதேநாள் செல்ல தயாராக இருக்க வேண்டும்.

ஆடம்பரம் கிடையாது

இந்த காரணத்தால் தங்கும் அறைகளில் கூட ஆடம்பர பொருட்கள் யாருமே வாங்கி உபயோகப்படுத்துவது கிடையாது என்று வெளிநாடுகளுக்கு பணியின் நிமித்தம் சென்றுவருவோர் கூறுகிறார்கள். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், 42 இஞ்ச் வண்ண தொலைகாட்சி பெட்டி வாங்கினால் கஷ்டப்பட்டு வாங்குபவர் அதை ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தவும் மாட்டார்.

வெளிநாடுகளில் பணிபுரிவோரில் மிகச்சாதாரணத் தொழிலாளியும் உண்டு. அரிய வாய்ப்பால் அறிவையும் உழைப்பையும் வெளிநாட்டினருக்காக வழங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலையோரும் உண்டு. எந்த நேரமும் சவூதியின் 'நிதாகத்' போன்ற சட்டங்களால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.

பல தியாகங்கள்

பல தியாகங்களுக்கு இடையே இவர்களால் சொந்த நாட்டுக்கு அந்நிய செலவாணி ஈட்டித்தரப்படுகிறது. ஆனால், அவர்களது நலனில் அரசுகள் அக்கறை செலுத்தவில்லை. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் குறித்து பல கட்சிகளும் கவனத்தில் கொள்ளவில்லை.

இது குறித்து ஓமனில் நிஸ்வா பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ஜேம்ஸ் கூறியதாவது:

இங்குள்ள விமான நிலையங்களில் நாங்கள் வந்திறங்கினால், கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் திருடர்களாய் மட்டுமே தெரிகிறோம். வீட்டுத்தேவைக்கு கொண்டு வரும் பொருட்களுக்குத் தான் எத்தனை சோதனைகள்?, கட்டுப்பாடுகள்? இதை தடுத்து நிறுத்தப்போவது யார்?. அனைத்து அரபு நாடுகளிலிருந்தும் மதுரை, திருச்சி, கோவை, போன்ற விமான நிலையங்களுக்கு நேரடியாக முதலில் வாரத்துக்கு மூன்று நாள் வீதம் விமானம் இயக்கி மக்களின் வரவேற்பை பொறுத்து தினசரியாக இயக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிவருகிறோம்.

நிறுத்தப்படும் விமானங்கள்

துபாயிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்போது ஒவ்வொன்றாய் நிறுத்தப்பட்டு வருகிறது. இவை முழுமையாய் மறைந்து தனியார் விமானங்களும் அண்டை நாட்டு விமானங்களும் அதிக பயண கட்டணத்துடன் எங்களை அச்சுறுத்துமுன் தடுத்து நிறுத்தப்போவது யார்?.

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பட்ஜெட் கட்டண தனியார் மற்றும் அரசு விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்தும் திருச்சி, கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களை இணைத்து நேரடி பட்ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளை துவங்கலாம்.

பொதி எடை குறைப்பு

சொந்த பந்தங்களை பார்க்க ஆண்டுக்கு ஒரு மாதமோ அல்லது இரு ஆண்டுக்கு இரு மாதமோ விடுமுறையை பிச்சையாய் பெற்று வரும் நாங்கள் முன்பெல்லாம் அனைத்து நிறுவன விமானத்திலும், 40 கிலோ பயண பொதியை (Cabin Baggage) கொண்டு வர அனுமதிக்கப் பெற்றிருந்தோம்.

அதிக பொதிக்கு ஆசைப்பட்டே உருப்படாத நிர்வாகம், குறித்த நேர புறப்பாடு உத்திரவாதமில்லாத சர்வீஸ் என தெரிந்தும் ஏர் இந்தியா (எக்ஸ்பிரஸ் அல்ல) விமானத்தில் சென்னைக்கும், இதர நகரங்களுக்கும் பயணித்தோம் இப்போது அதிலும் கை வைத்து 10 கிலோவை குறைத்து விட்டார்கள், 40 கிலோ பொதியை (Cabin Baggage)மீண்டும் அனுமதித்தால் நாங்களும் பயன்பெறுவோம் என்றார் அவர்.

அதே கல்லூரியில் பொறியியல்துறை பதிவாளராக பணிபுரியும் குமரி மாவட்டம் திக்கணங்கோட்டைச் சேர்ந்த பி. பென் சுஜின் கூறியதாவது:

வளைகுடா இந்திய தொழிலாளிக்கும் எத்தனையோ பிரச்சினைகள் பணிபுரியும் கம்பெனியுடன் ஏற்படத்தான் செய்கின்றன.

ஆனால், அண்டை நாடான இலங்கை தூதரகத்துக்கும், தன் பிரஜைகளின் உரிமைகளுக்காக எந்நேரமும் வரிந்து கட்டும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கும் இருக்கும் அக்கறையில் நம் தூதரகத்தின் அக்கறை எத்தனை சதவீதம் என சொல்ல முடியுமா?

தீர்வு என்ன?

வளைகுடா தொழிலாளர்கள் சந்திக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சினைகளை கேட்டு, அவற்றிற்கேற்றவாறு உதவிட வளைகுடா நாடுகளின் விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்திய தூதரகம் சார்பாக சிறப்பு முகாம்களை தொடாந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரு வாரத்துக்கு ஒரு முறையோ நடத்தினால் எங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும்.

வளைகுடாவிலிருந்து நாங்கள் விரட்டி அடிக்கப்பட்டால் அல்லது நாங்களாகவே முடித்துக்கொண்டு வந்தால் நாங்கள் இந்தியதன்மையை புரிந்து காலூன்றவே பல ஆண்டுகள் ஓடிவிடும், எங்களுக்கு உதவிட வட்டியில்லா கடன், மானியம், வாரியம் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

கண்டு கொள்ளவில்லை

தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாலை வாய்ப்பு நிறுவனத்தின் பிரிவு அலுவலகத்தை (Overseas Manpower Corporation Ltd ) மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, சேலம், வேலூர், போன்ற விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

இதுபோல் பல்வேறு கோரிக்கைகளை வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியில் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்திலும், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இதுபோன்ற விஷயங்களை அரசியல் கட்சிகள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.


வளைகுடா வாழ் தமிழர்கள்வெளிநாடு வாழ் தமிழர்கள்மக்களவைத் தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x